2

கனகநூகா பாறையின் வெட்டுத் தடங்களைச் சுட்டியவாறு குன்றின் உச்சியைக் காட்டினாள். சின்னதாக ஒரு கற்கோவில் தெரிந்தது. குளத்தில் செந்தாமரைகள் மலர்ந் திருந்தன. குளித்துவிட்டு மேலே ஏறலாம் என்ற கங்கா உடைகளைக் களையத் தொடங்கினாள். அதுவரை அந்த நிழலில் காத்திருப்பதாகச் சொன்ன கம்பணன் இன்னும் விழுது இறக்காத அந்த இளம் ஆலமரத்தை நாடிப் போனான்.

சில்லென்ற நீரில் அமிழ்ந்த கங்கா சற்றே நீந்தி முன்னே போனாள். கால்கள் பாவவில்லை. ஆழமிருக்கும். நீருக்கு மேலே தலை தூக்கியவள் கூந்தலை அவிழ்த்து விரித்தாள். உள்ளாடையையும் உருவி எதிரே பாறையில் நின்ற கனகாவை நோக்கி எறிந்தாள். குன்றின் பின்னே சூரியன் இறங்கியிருந்தான். மாலை நெருங்குகிறது. இந்தக் குன்றைப் பார்த்ததிலிருந்து துங்கபத்ரையே நினைவில் ஓடிக்கொண்டிருக்கிறது.மீண்டும் மூழ்கிக் கண் திறந்து ஆழத்தைப் பார்த்தாள். தரை தெரிய வில்லை. மாலை வெயிலில் பசுமஞ்சளாய் நீர் கலங்கித் தெரிந்தது. இந்தக் குளத்தில் குளித்தெழுந்த சமணமுனி கள் எத்தனை எத்தனை பேர்? ஏன் எப்போதும் ஊர்களின் புறத்தே கற்குன்றுகளுக்குள் இன்னொரு கல்லாய் உறைந்திருந்தனர்? இன்னும் இன்னும் என்று இந்த உலகையே புலன்களால் துய்க்கத் துடிக்கும் மானுட இச்சையிலிருந்து விலகிய அவர்கள் தேட்டம்தான் என்ன? எவ்வழியே போனாலும் மனிதன் அழிந்து தான் போவான். அது மட்டும் நிச்சயம். பின் எது மிஞ்சும்? இந்தச் சிலைகளா? கதைகளா? எழுத்தா? அவையும் அழியும். வைகையின் புனலோடு போய் அழிந்த ஏடுகள் எத்தனை? சிந்தையில் அரும்பி எழுதாமலே கழுவேற்றத் தில் கருகிப் போயுமிருக்கலாம். எண்ணாயிரம் பேர். எண்ணிக் கையில் மிகை இருக்கலாம். எண்பது பேரே ஆனாலும் அது கடவுளின் பேரால் நடந்தது. ஆட்சி அதிகாரத்தின் மமதையால் நடந்தது. அந்த வன் கொலைக்குச் சாட்சியாய் இருந்த வைகை கண்ணீர் பெருக்கி ஓடியிருக்கும். அந்த வலியின் துயர் சுமந்த காற்று இந்த மண்ணின் மார்பெல்லாம் அறைந்து அறைந்து புலம்பியிருக்கும்.

துங்கபத்ரையில் சிந்திய ரத்தம்... பல்லாயிரம் பெண்கள் குழந்தைகளின் ரத்தம் நதியோடு ஒழுகாது இன்னும் உறைந்திருக்கிறது. முகம்மதியர் மூட்டிய தீ... ஆனைகுந்தியில் மூன்று நாட்களாக நின்றெரிந்த தீ இன்னும் அணையாது கனல்கிறது. பெண் மனதில் வஞ்சினம் அணையாது. அதை முலைப்பாலோடு குழந்தைக்கும் புகட்டுவாள். தலைமுறைகளுக்கு அது ரத்தத்தில் எரிந்து கொண்டிருக்கும். கங்கா நீருக்கு மேலே தலை உயர்த்தினாள். மூச்சு வாங்கியது.

பாகீரதியை இடுப்பில் தூக்கிக்கொண்டு ஒரு தாதி தப்பித்து ஓடினாள். ஆனைகுந்தியின் மதில் தாண்டி ஆற்றைக் கடந்து தென்கரையில் மாதங்க மலைமேல் ஏறி ஒளிந்திருந்தாள். ஐந்தே வயதான அறியாச் சிறுமியான பாகீரதி பசியோடும் பயத்தோடும் மலை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். வடகரையில் பற்றி எரியும் ஆனைகுந்தியைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அழு தழுது பசியால் மயங்கி விழும் வரை.

மாதவவாரு இளவரசி பாகீரதி பின்னர் எதுவுமற்று எங்கோ ஒரு குடிசையில் வளர்ந்தாள். பின்னும் ஒன்பது ஆண்டுகள் கழித்து தென் கரையில் மாதங்கமலை அடிவாரத்தில் ஏமகூடப் பாறைகளின் மேல் விருபாஷர் கோவிலைச் சுற்றி விஜயநகரத்தின் கோட்டை மதில்கள் முளைத்தன.

பாகீரதி அவ்வா பேரப்பிள்ளைகளை மடியில் கிடத்தி இந்தக் கதையைத்தான் சொல்வாள். மொழியறிந்தபோது கங்காதேவி கேட்ட முதல் கதை இதுதான். வட்டமிட்டு உள் சுழித்து அ என்று அவள் எழுதக் கற்குமுன் குறுவாள் ஏந்தக் கற்பித்திருந்தாள் அவ்வா. பெருவாள் எடுத்துப் பயின்று வீராங்கனை ஆகும் வரையும் அதன் பின்னும் எத்தனையோ முறை மாதங்கமலை மேல் நின்று வடகரையில் தெரியும் ஆனைகுந்தியைப் பார்த்த வாறிருந்திருக்கிறாள் கங்கா. இன்று அது மீண்டும் நகரமாகிவிட்டது. விஜயநகரத்தின் ஓர் அங்கம். ஆனால் அவள் கண்களுக்கு எரிந்துகொண்டிருக்கும் ஆனைகுந்தி தான் தெரியும். துங்கபத்ரை அதன் செந்தழல் பிம்பத்தைச் சுமக்கமுடியாமல் துடிக்கும். அவள் மட்டுமல்ல, கம்பிளி மண்ணின் குழந்தைகள் அனைவரும் அந்தக் கதை கேட்டுத்தான் வளர்கிறார்கள்.

கிளிகள் மிழற்றும் ஒலி கேட்டு மேலே பார்த்தாள். வடக்கிருந்து ஒரு கிளிக்கூட்டம் தென்புறத் தோப்புகளுக் குப் பறந்து கொண்டிருந்தது. அமணமலையிலிருந்து பாய்ந்திறங்கிய அம்பு போன்ற ஒன்று கிளிக்கூட்டத்தில் தைத்து எகிறிச் சென்று ஆலமரத்தில் மறைந்தது. கிளிகள் அலறிச் சிதறிப் பறந்தன. மின்னல் வெட்டியது போலி ருந்தது. ராஜாளி என்ற மின்னல். வல்லூறு வேட்டை. சாளுவப் பறவை! பக்ஷி ராஜா! கரையில் நின்ற ஜோகம்மாவைப் பார்த்து கங்கா கத்தினாள் ‘இப்போதே போரைத் தொடங்க வேண்டும். உடனே. ராஜாவிடம் போய்ச் சொல். ஓடு.’ கரையில் கங்கா ஏறவும் நாற்புறமும் தோழிகள் நின்று சீலையால் அரணாகச் சுற்றினர்.

கம்பணன் கோபத்தோடு கங்காவை நோக்கி வந்தான். நெருங்கியபோது, நிறைநிர்வாணத்தில் அவள் தலை துவட்டியவாறு அவனைப் பார்த்தாள். அவன் கத்தினான். ‘கங்கா! இது விளையாட்டல்ல. போர். இன்னும் சற்று நேரத்தில் இருட்டிவிடும். முழு அமாவாசை...’ ‘நான் தீர்மானித்து விட்டேன். இதில் இனி மாற்றம் இல்லை. உடனே சென்று தயாராகுங்கள்.’

‘உன் பிடிவாதத்திற்கு அளவில்லையா? என்னோடு விளையாடலாம். ஆயிரமாயிரம் உயிர்கÇளாடு விளை யாடுகிறாய்.’

“குமார கம்பணா! விலகி நில். விஜயநகரப் போர் இதுவல்ல. இது என் யுத்தம். கம்பிளியின் யுத்தம். இதற்காகவே நான் பிறந்தேன். இந்த நாளுக்காகவே காத்திருந்தேன்.

இதற்காகத்தான் வாளெடுத்தேன். ஆயிரமாயிரம் கொல்லவாருகளை இழந்தாலும் அந்த ரத்தத்தில் நடந்துபோய் இன்றிரவே பலி எடுப்பேன். ஆனைகுந்தியின் பகை முடிப்பேன். போ! அந்த ரேணுகையின் மேல் ஆணை.”

குமார கம்பணன் நடுங்கினான். அவன் அறிந்த கங்கா அல்ல இவள். இந்தக் குரல் ஏதோ அமானுட வல்லமை யின் அசரீரி போல் ஒலிக்கிறது.

சூரியன் நெற்றி மட்டத்திற்கு இறங்கிவிட்டான். பசுமலை அடி வாரத்தில் வடக்கே கங்கையம்மன் பூஜைக் கான ஏற்பாடுகள் அவசர கதியில் நடந்தன. தளபதிகள், குலப் பெரியவர்கள், அணித் தலைவர்கள் எல்லோரும் வந்து வரிசைப்படி நின்றனர். அமணமலையிலிருந்து கங்காவும் கம்பணனும் நேரே பூஜைக்கு வந்தனர். பூஜை ஆரம்பமாயிற்று.

சக்கிலிய மாதங்கி ஒருத்தி கங்கையம்மன் செப்புச் சிலையைத் தலையில் தூக்கியவாறு வந்தாள். பின்னே ஒன்பது தேவதுந்துபிகள் வரிசையில் வந்தன. அந்த உறுமிகள் இழையும் ஒலி மட்டுமே வ்வூ... வ்வூ... என்று காற்றில் மிதந்துகொண்டிருந்தது. மண்ணில் விரிக்கப்படட கம்பளத்திற்கு எதிரே இருந்த பீடத்தில் கிழக்கு நோக்கி கங்கையம்மனை வைத்தாள். தளிப் பெண்டிரான இரு பசவிகள் நீராட்டி, சந்தன களபங்கள் பூசி அம்மனை அலங்கரித்து மாலை அணிவித்தார்கள்.

பன்னிரு கைகள் விரியத் தேவி தன் மக்களை நோக்கி நின்றாள். ஒரு கையில் திரிசூலம். மறு கையில் உடுக்கை.ஒன்றில் அம்பு. பிறிதில் கம்பு. ஒரு கரம் பாம்பைப் பிடிக்க, மறு கரம் செடியை ஏந்தியது. தக்கையையும் தாடிமப் பழத்தையும் இரு கைகள் கொண்டிருந்தன. வில்லொரு கையிலும் சூலமொரு கையிலுமேந்தி ஆங்கார ரூபிணியாய் நின்ற அன்னையே பின்னும் அன்னம் ஒரு கரத்திலும் விசிறி ஒரு கரத்திலும் தாங்கி அருள்பாலித்தாள்.

மீண்டும் உறுமிகள் விம்மத் தொடங்கின. கொல்ல வாருகளின் காமதேனுவான பொலி ஆவு முதலில் வந்தது. முத்து முகபடாம் அணிந்து கொம்புகளில் தங்கப் பூண்கள் பூண்டு, சிமிலையும் உடலையும் வண்ணப் பட்டு அலங்கரிக்க,கால்களில் தங்கச் சலங்கைகள் ஒலிக்க கம்பீரமாக நடந்து வந்து கம்பளத்தின் மீது நின்றது.

இப்போது உறுமிகள் சுருதி குறைக்க, குல ஜென்டடு வாரு பொலி ஆவுக்கான வாழ்த்துப் பாடலைப் பாடினர். ஆவும் அம்மனும் எதிரெதிரே இருந்தனர். சூழ நின்றவரெல்லாம் கைகூப்பித் தொழுதனர். ஒரு பசவி நனைந்த தினையை உள்ளங்கைகளில் ஏந்தி நீட்ட பொலி ஆவு அதைத் தின்றது. முடித்ததும் கோபாலன் கயிற்றைப் பற்றி அழைத்துக் கொண்டு போனான்.

அடுத்ததாக, குல வரிசைப்படி மூத்த குடியினரான சக்கிலியரின் ஆவு வரவேண்டும். ஆனால் அவர்கள் ஆதியில் எப்போதோ ஆவையே கொன்று தின்றுவிட்ட தால் குல விலக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் ஆவு வளர்ப்பதும் தடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் சடங்கு களில் முதல் மரியாதை எப்போதும் உண்டு. எனவே அவர்களுக்காக பசவண்ண ஆவு வந்தது. அதே அலங் காரங்கÇளாடு வந்து கம்பளியில் நின்றது. ஜெண்டடு வாரு சக்கிலியக் குலப் பெருமைகளைப் பாடினான். எல்லோரும் தொழுதனர். தினையை ஏற்றுக்கொண்டு விலகிச் சென்றது.

அடுத்து சில்லவாரின் புல்லை ஆவு வந்து நின்றது. பின் வல்லக்கவாரின் மயிலை ஆவு. பாலமவாரு, குருவாரு,குஜ்ஜிபொம்மு, வெக்கிலியர், காவன்னகாரு, இர்ரிகாரு, குறிபாலமவாரு என்று ஒவ்வொரு ஆவும் வந்து கம்பளி ஏற அந்தக் குலப்பாடகர்கள் குலப் பெருமைகளைப் பாடினர்.

கங்கையம்மன் வழிபாடு முடிந்தது. சூரியன் மறைந்து விட்டான். வெளிச்சம் மட்டும் மங்கலாய் இன்னும் மிச்சமிருந்தது.

அடுத்து எல்லம்மன் பூஜை. இரண்டு யானை உயரத்திற்கு சாரங்கள் கட்டி மேலே பீடத்தில் எல்லம் மனை வைப்பதுதான் வழக்கம். சாரத்தில் ஏறித்தான் சாமி மாலையை எடுக்க வேண்டும். இப்போது நேரம் இல்லையாதலால் பசுமலையை ஒட்டியிருந்த சின்ன மண்குன்றின் உச்சியில் எல்லம்மனை வைத்திருந்தனர். இந்த பூஜையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் எல்லாம் வந்து அணிகளுக்கு முன்னே நின்றிருந்தனர். சற்று தூரத்தில் வெட்டவெளிக்கு அப்பால் அந்தக் குன்று இருந்தது.

எருமைக்கிடாரி ஒன்றின் மூக்கணாங்கயிறைப் பிடித்தவாறு இருவர் குன்றின் அடிவாரத்திற்குச் சென்று எல்லம்மனை நோக்கி நிறுத்தினர். உறுமி முழங்கிக் கொண்டிருக்க, ரம்பாவுல கேசவனின் பட்டாக் கத்தி மின்னலாய் வெட்டியது. குருதி பீறிட்டுப் பாய, சக்கிலியரின் எக்காளம் அலையலையாய் உயர்ந்தது. அது உச்சத்தைத் தொடும்முன் மற்றவையும் சேர்ந்து கொண்டன. முரசுகள் திசையெங்கும் முழங்கின. பேரொலியால் காற்று நடுங்கியது. வரவிருந்த இருள் வெருண்டு ஓடியது. போர் தொடங்கிவிட்டது. இனிதான் எல்லம்மனின் மாலையை எடுக்கும் சடங்கு. யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். கன்னி கழியாதவராக இருக்கவேண்டும். எப்போதும் அதை எடுப்பதில் போட்டி நிலவும். யார் முதல் எட்டை எடுத்து வைப்பது என்பதில்தான் தயக்கமும் தாமதமும். பிறகு ஆளாளுக்கு எல்லம்மனை நோக்கிப் பாய்ந்து ஓடுவார்கள். வல்லக்கவாரும் சில்லவாரும் இதைப் பெரிய கௌரவப் பிரச்சனை யாகவே கருதுவார்கள். யார் முந்துவது என்பதில் அவர்களுக்குள்தான் போட்டி.

முரசொலிகளும் பெரும் ஆர்ப்பரிப்புமாகப் போர்விளி மேலும் மேலும் கூடிக்கொண்டிருந்தது. அது நரம்புகளை முறுக்கேற்றி மனிதர்களை வேறு உலகத்துக்கு இழுத்துச் சென்றது. கூட்டத்தில் சலனம் தெரிந்தது. ஒன்றிரண்டு இளைஞர்கள் எல்லம்மனை நோக்கி ஓடத் தொடங்கினர். நான்கைந்து குதிரைகள் அணிகளினூடே பாய்ந்து வெட்ட வெளிக்கு வந்து விட்டன. மேற்கே கடைசியாய் நின்ற முந்நூற்றுவர் குதிரை வீராங்கனைகளில் ஸ்ரீஜானகிவாரிப் பெண்கள் கூட்டத்திலிருந்து ஒரு குதிரை விலகி முன்னோடியது. சில நொடிகள் கழித்துதான் அவள் கனகநூகா என்று உணர்ந்தார்கள். பெண்களின் குலவைச் சத்தம் உயர்ந்தது. ஓடிச் சென்றவர்களையும் மற்ற குதிரைகளையும் மிஞ்சி கனக நூகாவின் குதிரை குன்றிலேறி முன்னே ஓடியது. பேரிரைச்சலையும் மீறி அணிகளினூடே ‘பாலமவாரு...’ ‘பாலமவாரு...’ என்ற சொல் மந்திரம் போல் ஒலித்துச் சென்றது. எல்லம்மாவை வணங்கிவிட்டு சாமி கழுத்தில் இருந்த வஞ்சி மாலையைத் தூக்கித் தான் அணிந்து கொண்டாள்.

ரேணுகாவின் காலடியில் சிவப்புக் கச்சையில் இருந்த குறுவாளை எடுத்து கனகநூகா தன் கழுத்தை அறுத்துத் தன்னைத் தானே பலியிட்டாள்.

7

விஸ்வநாத நாயக்கர் அறுபத்தைந்தாவது வயதில் 1564ல் நோய் வாய்ப்பட்டு காலமானார். மறுநாள் மாலை வடக்கு வாசலுக்கு நேர் எதிரே அகழிக்கு அப்பால் வைகைக் கரையில் சந்தனச் சிதை அடுக்கப்பட்டது. பாளையங்களிலிருந்து அநேகமாக எல்லா ஆண்களும் மதுரையில் வந்து குவிந்துவிட்டனர். மதுரைக்கு வெளியிலும் வைகைக் கரையெல்லாம் பெருங்கூட்டம். மதுரையே கண்ணீரில் தளும்பிக் கொண்டிருந்தது.

இளவரசன் கிருஷ்ணன் சிதையை வலம் வந்தான். அந்தக் காட்சியைப் பார்க்கச் சக்தி இல்லாமல் அரியநாத முதலியார் அந்த இடத்துக்கே வரவில்லை. கிருஷ்ணன் தீ மூட்டியபோது தளவாய் கேசவப்ப நாயக்கர் தரையில் விழுந்து கதறினார். அவரைத் தூக்கி நிறுத்தியபோதும் கட்டுப்படுத்த முடியவில்லை. கிருஷ்ணன் அங்கே நிற்காமல் அழுது கொண்டே மதுரைக்குள் ஓடினான்.

அவள் மஞ்சள் ஆடையுடன் வைகையில் மூழ்கி எழுந்தாள். கரையேறியதும் கையில் எலுமிச்சம் பழத்தைக் கொடுத்தார்கள். வாங்கி உள்ளங்கைகளுக்குள் வைத்துக் கூப்பிய கரங்களுடன் அவனை நோக்கி நடந்தாள். விஜயதசமிக் கூட்டம் ஆரவாரிக்க அவன் நடுஅரங்கில் வாள் வீசிக் கொண்டிருந்தான்... கொண்டவீடு விஜயோத்ஸவத்தில் வராகக் கொடி ஏந்தி குதிரையில் ராஜவீதியில் முன்னில் வந்தான்... விட்டலர் கோபுரத்தின் கீழ் வேங்கடன் மீதேறி வெற்றி வீரனாய் நுழைந்தான்... ஆமுக்த மால்யதா அரங்கேறிய போது வசந்த மண்டபத்தில் யாரும் அறியாமல் ஒரு மாலையை அவளுக்கு அன்பளித்தான்... நாள்தோறும் அவள் கோலமிடும் வேளை தவறாமல் குதிரையில் கடந்து அவளைப் பார்த்துக் கொண்டே போனான்... அவள் கைபற்றி ஞாபகப் பரிசாகக் கைவளையை உருவிக் கொண்டான்.

சிதையை நெருங்கி மரப்படிகளில் ஏறினாள்.

மஞ்சள் சுடர்களாய் அவனைக் கண்டாள். மஞ்சள் வெயில்... வாள் பயிற்சி... அவன் சுற்றி வந்தான்... பருக்கள் பூத்த முகம் பொன்னொளியில் திகழ்ந்தது செப்புச்சிலையென... அவன் கண்களைக் கண்டாள்... அவள் தன்னைப் பெண் என உணர்ந்த அந்த முதற் கணத்தில்...

17

ரௌத் தாக்குவான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ராஜூ ஏமாற்றத்தால் சினமடைந்தான். தஞ்சாவூர் அணிகளிலிருந்து ஊளையும் வசைகளும் எழுவது திரும்பிவரும் ரௌத்துக்குக் கேட்டது. ரௌத் திரும்பி வரும்போது ஓரத்தில் நின்ற இரு மதுரை அணிகள் பாய்ந்து சென்று தஞ்சாவூரின் சிறகு நுனிகளைக் கடித்துக் குதறிவிட்டு தொடர்ந்து மோதாமல் திரும்பித் தம் நிலைகளுக்கு வந்தன.

ராஜூ அனைத்து வரிசைகளிலுமிருந்த முதல் இருபது குதிரைகளை ஈட்டி ஏந்தித் தாக்குமாறு உத்தரவிட்டு தானும் முன்னே பாய்ந்தான். ராஜுவை மிக அருகே நெருங்கவிட்டதும் கதிரி நாயக்கரைப் பின்வாங்கச் சொல்லி வேங்கடரின் முரசு இரட்டைத் தாளத்தில் ஒலித்தது. பின்வாங்கிய மதுரைக் குதிரைகள் விலகி அரைவட்டம் சுற்றி மோதல் தொடங்கிவிட்ட நடுக்களத்தின் மீது பாய்ந்தன. ஆபத்தை உணர்ந்த ராஜூ சண்டையிட்டவாறே பின்வாங்கும் சமிக்ஞையோடு குழலை எடுத்து ஊதினான். சீக்கிரமே கால் பங்கு இழப்புகÇளாடு தஞ்சைக் குதிரைகள் பின்வாங்கி ஓடின. விரட்டிப் போன கதிரியை வேங்கடர் பின் தொடர்ந்தார்.

துவந்த யுத்தம் ஆரம்பாகி முன்னணிக் குதிரைகள் மோதிக் கலந்து வெட்டும் குத்தும் வெறிக்கூச்சலுமாக மாறியது.

அக்கராஜூ அந்தக் குழம்பிய மோதலிலும் சுற்றிலும் வாளால் வெட்டி வீழ்த்தி வழியமைத்துக்கொண்டு ரௌத்தை நெருங்கிவிட்டான். யுத்தமுனைப்பில் இருந்த ரௌத் தற்செயலாக அவனைப் பார்த்ததும் அவனை நோக்கிப் போனான். குதிரைகள் நெருங்கி வாட்கள் மோதி விலகின. மிகுந்த தன்னம்பிக்கையோடும் நிதானத்தோடும்,ஆவேசமாக வரும் வீச்சுகளைத் தடுத்தும் விலக்கியும் சமாளித்துக் கொண்டிருந்தான் ரௌத். தங்கள் அணிகளின் பின்னால் நின்று களத்தை கவனித்துக்கொண்டிருந்த வேங்கடர் மதுரைக் குதிரைகளைக் கூவி விலக்கிக்கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னாலேயே கதிரியும் வந்தார். மதுரைக் குதிரைகள் தஞ்சையைப் பின்னுக்குத் தள்ளிச் சென்றிருந்தன. ராஜூவைத் தாண்டி மதுரை வீரர்களே சுற்றிலும் முன்னேறிக் கொண்டிருந்தனர். வேங்கடர் கதிரியிடம் சொன்னார் ‘மாமா, சீக்கிரம் முடிச்சி விடுங்க. வீணா உயிர்க போகுது.’ வேங்கடரும் கதிரியும் பிற குதிரைகளை வெகுவாக விலக்கிவிட்டு தனிச் சமரில் இருந்த வீரர்களுக்கு வாய்ப்பாக வட்டம் அமைத்துக் கொடுத்தனர். ரௌத் சற்றும் சளைக்காமல் மோதிக்கொண்டிருந்தான். ‘ரவுத்து... நீ விலகு’ என்ற குரல் வந்ததும் ரவுத் முன்னே ஓடித் திரும்பிப் பார்த்தான். பங்காருவுடன் கதிரி ராஜூவுக்கு எதிரே நின்றார். அவரைக் கண்டதும் ராஜூ உடைவாளைச் செருகிவிட்டு ஈட்டி வேண்டும் என்றான். அருகிலிருந்த ஒரு மதுரை வீரனின் ஈட்டியை வாங்கி அவனிடம் நீட்டினார் வேங்கடர். கதிரி இருபுறமும் கூரான நாலடி நீளப் பட்டயத்தை இரு கைகளிலுமாகப் பிடித்து ஏந்தியிருந்தார். களத்தில் இறங்கிவிட்டால் அவருக்கு இதுதான் வசதி. யாரும் நெருங்கமுடியாது. வெட்டி வீசிப் போவார். கடிவாளமில்லாமல் அவர் கால் தட்டல்களில் குறிப் புணரப் பழகியிருந்தது பங்காரு.

ஈட்டி வீச்சுகள் நாலைந்து முறை வெறுமனே காற்றில் பாய்ந்தன. பங்காரு விலகி விலகி அவனுக்குப் பின்பக்கமாகவே சென்றது. அதை உணர்ந்ததும் ராஜூ தன் குதிரையைத் திருப்பாமலே பின்னுக்கு மட்டுமே இழுத்து எப்போதும் கதிரி முன்னால் நிற்குமாறு பார்த்துக்கொண்டான். கதிரி தாக்க முற்படவே இல்லை. உயர்த்திய பட்டயம் அசையவேயில்லை. அவர் வாய் வெற்றிலையைக் குதப்பியவாறிருக்க, கண்கள் விலகாமல் தன் கை மீதே இருப்பதை கவனித்தான் ராஜூ. பங்காருவைத் துரத்தி அவன் வட்டமடிக்க முயன்றபோது சட்டென்று அது அவனுக்கு முன்னே பாய்ந்தது. இம்முறை கதிரி வீசியிருக்கலாம். ஆனால் வீசாமல் ஏனோ காத்திருந்தார்.

குதிரைகள் மீண்டும் தட்டாமாலை ஆடின. ராஜூ தன்னை மீறிய வெறியிலிருந்தான். வேட்டையில் காட்டு மரங்களுக்கிடையிலேயே ஓடித் திரிந்து பழகிய பங்காரு வெகு லாகவமாக போக்கு காட்டிக் கொண்டிருந்தது. போரின் கதியையும் தன் நிலையையும் உணர்ந்த ராஜூ ஆவேசமாகப் பக்கவாட்டில் சாடிக் குத்திவிடப் பாய்ந்தபோது மின்னல் பொழுதில் தன் கையைக் காணாமல் திகைத்தான். ரத்தம் பீய்ச்சியடித்தபோது, பர்தாவுக்குள்ளிருந்து சிரிக்கும் பளிங்குக் கண்கள் நினைவில் மின்ன... தலை பறந்து விழுந்து மண்ணில் உருண்டது.

மதுரையின் போர் நிறுத்த முரசம் ஒலித்தது. வீரனொருவன் ஈட்டியில் குத்தித் தூக்கிய ராஜூவின் தலையோடு குதிரையில் தஞ்சை அணியை நோக்கி ஓடினான். அவர்களுக்கிடையே பெரும் சலசலப்பும் கூச்சலும் எழ, ஏதோ ஒரு குதிரை தெற்கு வாசலை நோக்கி ஓடவும் சில பின்தொடர்ந்தன. சில நொடிகளில் எல்லாக் குதிரைகளும் நெரிபட்டு வாசலுக்குள் புகுந்தன. வாசலை அடைக்கவோ அகழிப் பாலத்தை உடைக் கவோ தஞ்சாவூருக்கு சமயமில்லை. தஞ்சைக் குதிரை களை விரட்டிப் பின்தொடர்ந்து மதுரைக் குதிரை யணிகள் உள் நுழைந்தன; ஒரு பீரங்கிக் குண்டு கூட வெடிக்காமல் ஒரு தலைநகரக் கோட்டைக்குள் நுழைந்துவிட்டன. அந்தியாகிவிட்டது.

தஞ்சை தளவாய் ரங்கப்பர் துணிவோடு ராஜவீதியின் இரு புறங்களிலும் காலாள் வீரர்களை நிறுத்தியிருந்தார். எஞ்சியவர்களை சந்துகளில் ஒளிந்தும் வீடுகளின் மேல் ஏறி நின்றும் தாக்கும்படி உத்தரவிட்டார். உள்ளே வந்த தஞ்சைக் குதிரைகள் ஊரை அறிந்திருந்ததால் பரவி மறைந்துவிட்டன.

மடை திறந்ததுபோல உள்ளே வந்த மதுரைக் குதிரைகள் தெருவோரங்களில் நெரிபட்ட தஞ்சை வீரர்களை வெட்டிக் குத்தித் தாண்டிப் போயின. சென்ன கதிரி நாயக்கர் முதல் அணியுடனே உள்ளே வந்து விட்டார். வேங்கடர் அகழிக்கு இந்தப் பக்கமே நின்று நடப்பதைக் கவனித்தார். குதிரைகள் வாசலுக்குள் நுழைய முடியாமல் தேங்கின. அலங்கங்களின் மேலிருந்து அம்புகள் இறங்கி சில வீரர்கள் காயம் பட்டனர். வேங்கடர் உத்தரவின் பேரில் குதிரைகள் பின்வாங்கும் முரசுத்தாளம் எழுந்தது. குதிரைகள் பின்னே வந்தவுடன் காலாட்படையை உள்ளே அனுப் பினார். படிகளில் ஏறிப்போய் அலங்கத்தைக் கைப்பற்று மாறு சொன்னார். மேலே இதை எதிர்பார்த்திருக்க வேண்டும். மன்னரின் தலை தெரிந்தது. தோளில் கட்டாரியைச் சாத்தியிருந்தார். வேளக்காரர்கள் அவரை அழைத்துக்கொண்டு மதில் மேலேயே மேற்கு நோக்கிச் செல்வதை வேங்கடர் கண்டார். சற்று நேரத்தில் அலங்கம் பிடிபட்டது. வழி கிடைத்ததும் மீண்டும் குதிரையணிகள் உள்ளே பாய்ந்தன.

வேங்கடர் முரசறிவிப்பாளர்களை அழைத்துவரச் சொல்லி மதுரைப் படைகளுக்கான உத்தரவுகளைத் தெளிவாகச் சொன்னார். மூன்று வாசல்களையும் திறந்து தப்பி ஓடுகிறவர்களுக்கு வழிவிடவேண்டும். விரட்டிச் சண்டையிடவேண்டாம். ஆயுதம் தூக்காத யாரையும் தாக்கக்கூடாது. முரசுக்காரர்கள் உள்ளே ஓடினார்கள்.

கதிரி நாயக்கரிடம் இருந்து வேங்கடருக்குத் தகவல் வந்தது. ‘தளவாய் ரங்கப்பர் கதை முடிந்தது. சண்டை பெருமளவு ஓய்ந்துவிட்டது. ஆங்காங்கே நடக்கும் மோதல்கள் இன்னும் சற்று நேரத்தில் முடிந்துவிடும். குதிரைகளைப் பிடுங்கிக்கொண்டு ஆட்களை மட்டும் ஓடவிடுமாறு வாசல்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.’

எல்லாத் திசைகளிலிருந்தும் மொத்தமாகத் தெற்கு வாசல் முன்னே வந்து கூடி மறிந்து நின்ற மதுரைப் படைகளைஒழுங்குபடுத்தி கட்டளைகளை இட்டுவிட்டு தன் வீரர்கள் தொடர அரண்மனையை நோக்கி குதிரையில் விரைந்தார் வேங்கடர்.

தீப்பந்த ஒளியில் வழியெங்கும் பிணங்கள் குவிந்து கிடப்பது தெரிந்தது. மதுரைக் குதிரைகள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே விரட்டி ஓடிக்கொண்டிருந்தன. எங்கும் கூச்சலும் கூப்பாடுமாகக் கிடந்தது.

‘இளவரசி எங்கே?’

நடுங்கியவாறு கன்னிமாடத்தைச் சுட்டினார்கள் தாதிகள். வேளக்காரப் படை அதைச் சுற்றிக் காத்து நின்றது. மதுரைக் குதிரைகள் அவர்களை மொய்த்தன. சிலர் தப்பி ஓடினர். உடைபட்ட கதவினூடே வீரர்கÇளாடு உள்ளே நுழைந்து இளவரசியைத் தேடினார் வேங்கடர். இரண்டாவது தளத்திற்கு ஓடியபோது கௌரி சிலைக்கு முன்னே அமர்ந்து மகாராணி கும்பிட்டுக் கொண்டிருந்தாள். தோழிகளுடன் தூரத்தில் சாளரத்தின் அருகே நின்றிருந்தாள் இளவரசி. அவளைக் கண்டதும் வேங்கடர் மனம் சட்டென்று நிம்மதியடைந்தது. அவர் வாழ்வின் மிகச் சந்தோஷமான தருணம் இதுதான். சொக்கன் அவர் தோளில் ஏறி விளையாடிய பிள்ளை யல்லவா!

மகாராணி அவரைக் கண்டதும் கௌரியின் காலடியில் இருந்த குறுவாளை எடுத்துத் தன் நெஞ்சுக்கு நேரே பிடித்தபடி கத்தினாள் ‘நெருங்காதே.’

பதறி அவளருகே ஓடிய வேங்கடர் ‘அம்மா... நான் பகைவனல்ல. உங்கள் சேவகன்’ என்றார். ‘மகாராஜா நன்றாக இருக்கிறார். போர் வெற்றி தோல்வியின்றி முடிந்தது. தஞ்சாவூருக்கு எந்த அவமானமும் இல்லை. இளவரசியை மதுரை மகாராணி என்று இங்கேயே அறிவித்துவிட்டு அழைத்துப் போகிறேன். நீங்கள் உத்தரவு தர வேண்டும்.’ ‘வென்றவன் ஒருபோதும் விஜயநகரப் பெண்களை சிறைப்பிடிக்க முடிந்ததில்லை.’ ‘இல்லை. தஞ்சாவூர் தோற்கவில்லை. யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உத்தரவிட்டால் இப்போது போரை நிறுத்துகிறேன். இளவரசிக்கு மதுரை ராணி யாகத்தான் விருப்பம். குழந்தைகளின் கனவுகளைத் தடுக்காதீர்கள்.’

வெறித்த விழிகளுடன் மகாராணி அப்படியே நின்றிருந்தாள். வேங்கடர் சடாரென அவள் காலில் விழுந்தார். ‘மங்கைத் தாயாரா நினைத்துக் கும்புடுகிறேன்’ என்றார். எழவில்லை.

‘அவளை மட்டும் அழைத்துக்கொண்டு போ’ என்ற குரல் கேட்டு எழுந்தார்.

கீழே வெறிக்கூச்சல்களும் போர்விளிகளும் கேட்டன. தஞ்சாவூரின் வேளக்கார வீரர்கள் புதிதாக வந்து மோதியிருக்க வேண்டும். அடுத்து ‘ஜெய ஜெய ஜக் கம்மா! விஜயீபவ!’ என்ற விஜயகோஷங்கள் அலை யலையாய் எழுந்துவந்தன.

‘கௌரி தோற்றுவிட்டாள்’ என்று மகாராணியின் உதடுகள் முணு முணுத்த வேளையில் அவள் குறுவாள் நெஞ்சில் பாய அப்படியே கீழே சரிந்தாள்.

‘அம்மா...’ என்று அலறியவாறு இளவரசி ஓடி வந்தாள். குத்திய குறுவாளை உருவினாள். என்ன நடக்கிறது என்று வேங்கடர் நிதானிப்பதற்குள் இளவரசி அதைத் தன் நெஞ்சில் பாய்ச்சிவிட்டாள்.

21

ரங்க கிருஷ்ண முத்துவீரப்பனுக்கு அப்போது வயது பதினைந்து. மன்னன் உடல் அரசவை மண்டபத்தில் கிடத்தப்பட்டிருந்தது. கால்மாட்டில் அம்மாவுக்கு அருகி லிருந்தபடியே முத்துவீரப்பன் அழுது கொண்டிருந்தான்.

ராணி மங்களத்தைச் சுற்றிக் கருகமணி அணிந்த கம்பளத்துக் கிழவிகள் அமர்ந்து வடுகில் ஒப்பாரிப் பாடல்களைப் பாடினர். தெய்வமாகப் போகும் மங்கம்மாவைக் குறித்த வாழ்த்துப் பாடல்களும் இருந்தன. பிணம் வெளியேறும் நேரம் நெருங்கியதும் ராணியின் சொற்படி தாதிகள் வந்து மங்கம்மாவை உடன்கட்டை ஏறுமுன் நீராட அழைத்தனர்.

மங்கம்மா எழ மறுத்துக் காலடியிலேயே அழுதுகொண்டிருந்தாள். மண்டபத்தின் ஓரங்களில் இருந்த பெண்கள் பக்கம் சலசலப்பு கிளம்பியது. மீண்டும் தயங்கித் தயங்கித் தாதிகள் வந்து மங்கம்மாவைத் தொட்டனர். நிமிர்ந்த மங்கம்மா உறுதியான குரலில் சொன்னாள் ‘முடியாது.’

மங்களம்மா எழுந்து வந்தாள். ‘சண்டாளி, சூத்திரச்சி வந்து எங் குல மழிச்சிட்டா. இனியாவது எம் மகன் நிம் மதியா வைகுந்தம் போகுட்டு மடி...’ என்று புலம்பிக் கொண்டே ‘சத்திரிய தர்மத்தைக் காப்பாத்த இங்க யாரும் இல்லயா?’என்று சபையைப் பார்த்துக் கத்தினாள். சடாரென்று எழுந்த முத்துவீரப்பன் வெறியோடு கத்தினான் ‘அவ்வா, வாய மூடு.’ மங்களம் அப்படியே உறைந்து நின்றாள்.

ஓடிப்போய் ஓரத்தில் காவல் நின்ற வீரன் ஒருவனின் வாளை உருவிக்கொண்டு நடு மண்டபத்தில் வந்து நின்ற முத்துவீரப்பன் ஓங்கிய உறுதியான குரலில் சொன்னான் ‘இனி என் அம்மாவப் பத்தி ஒரு வார்த்தை யாராவது சொன்னா இந்த இடத்திலேயே வெட்டுவேன் ஆண் பெண் யாராயிருந்தாலும் சரி.’

24

செவ்வாய்க்கிழமை உத்தப்ப நாயக்கனூர் போய் விட்டு மதியத்திற்கு முன்பே தன் நண்பர்கள் நால்வருடன் தாதனூர் வந்து சேர்ந்தான் முத்துவீரப்பன். தாதனூர் சுறுசுறுப்பாக கருப்பு கோவில் கொடையை ஏற்பாடு செய்திருந்தது. தாதனூரால் நல்லநாள் என்றழைக்கப்படும் கொடை இனி வியாழன் வரை நீளும்.

கருப்பு கோவிலைக் கும்பிட்டு விட்டு அவன் அமணமலை மேலிருக்கும் தீர்த்தங்கரரை வணங்கக் கிளம்பியபோது ஊர் பெரியாம்பிளை கோவிலுக்குள்ளி லிருந்து அந்தக் கட்டாரியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார். ஆச்சரியத்துடன் அதை வாங்கினான். அதன் தங்கக் கூர்மடலின் கீழ் பதிந்திருந்த தெலுங்கு எழுத்துகளை வாசித்தான்.

‘சுவஸ்தி, உத்தர தஷண பூர்வ பச்சிம சத்த சமுத்திரா திபதி, துலுக்க தள விபாடன், ராஜகுல திலக கிருஷ்ண தேவராயலு, பத்ராசலம் மண்டல சேனாதிபதி சேவப்ப நாயுடுகாருனு இச்சிந்த சாளுவ கட்டாரி. 1515’

‘சாளுவ கட்டாரி! விஜயநகரத்தில் மொத்தம் ஏழு சாளுவ கட்டாரி விருதுகள்தான் வழங்கப்பட்டிருந்தன. இது தஞ்சாவூர் வமிசத்தின் கட்டாரி. இங்கு எப்படி வந்தது?’ தஞ்சாவூர் சண்டைக்குப் போனவர்களில் பாதிப் பேர் இன்னும் தாதனூரில் உயிரோடு இருந்தனர். அந்தக் கதையைச் சொன்னார்கள். ‘சரித்திரம் விசித்திரமானது’ என்றான் முத்துவீரப்பன்.

கையில் கட்டாரியுடன் மலையேறித் தீர்த்தங்கரரிடம் போனான். கட்டாரியை உத்தப்பனிடம் கொடுத்துவிட்டு வணங்கினான். கட்டாரியின் மீதான அவன் வியப்புக்கு முன்னே சமண தெய்வங்களும் கீழே விரிந்து கிடந்த நிலக்காட்சிகளும் மங்கிப் போயின. தனது தளபதி களிடம் தெலுங்கு வீரகதைப் பாடல்கள் விதந்தோதும் விஸ்வநாதனின், ராயரின் பெரு வெற்றிகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான்.

‘உங்கள் மானசீக நாயகன் பெரிய ராயர் தானே?’

‘இல்லை. விஸ்வநாத நாயக்கன். எனக்கு ராயர் போல் சாம்ராஜ்யக் கனவு இல்லை. மதுரை நாட்டின் வளம் மட்டுமே எனது குறிக்கோள். எனது கடற்படை அலை களைத் தாவிக்கடந்து துறைமுகங்களைக் கைப்பற்றும். மதுரையின் கலங்கள் நிறைசுமையோடு தீரக்கடல் களைத் தாண்டிச் செல்லும். கிழக்கு மேற்குக் கரைத் துறைமுகங்களில் ஐரோப்பியக் கப்பல்கள் மதுரைக்குத் திறை செலுத்திவிட்டே நுழைய வேண்டும். இது தான் என் இலக்கு. என் அம்மாவுக்கு அவளது கனவு ஒன்று மிச்சமிருக்கிறது. அவள் சிறுமியாய் ஓடிவிளையாடிய சந்திரிகிரியிலிருந்து முகம் மதியர்களை விரட்டிவிட்டு வெற்றித் திருமகளாய் அங்கே முடி சூட வேண்டும். அதன் பின்பே திருவேங்கடரைத் தரிசிக்கப் போவேன் என்று சபதம் பூண்டிருக்கிறாள். என் நிலைப்படையை வலுப்படுத்திய பின்பே, பத்தாயிரம் அரபுக் குதிரைகளை வாங்கியபின்பே அது சாத்தியம். செஞ்சி, ராயவேலூரை வென்று சந்திரகிரியின் மேல் படை நடத்திச் செல்லப் போவது நானல்ல; என் அம்மாதான்.’ மலை மேலிருந்து தெற்கே பார்த்தான். தெற்கிலிருந் தும் மேற்கிலிருந்தும் தாதனூரை நோக்கி வரும் பாதை யெல்லாம் படை வருவது போல் கூட்டம். கள்ள நாட்டிலிருந்து மக்கள் வந்து குவிந்துகொண்டிருந்தனர். இவ்வளவு கூட்டத்துக்கும் தாதனூர் உணவளிக்க முடியாது என்பதால், காலையில் வந்து பார்த்த வுடனேயே செலவை எல்லாம் மதுரை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லியிருந்தான்.

பெரியாம்பிளை மலைச்சரிவில் மேற்கே இருந்த சமணக் குகைக்கு அவனை அழைத்துச் சென்றார். அவன் மீண்டும் கருப்பு கோயிலுக்கு வர முயன்றபோது தென் கால் கண்மாய் நிறைந்து ததும்புவதுபோலக் கூட்டம் தாதனூரைச் சுற்றிலும் பரந்திருந்தது. கள்ளநாட்டில் குழந்தைகளையும் முதியோர்களையும் தவிர எல்லோரும் தாதனூரில் இருந்தனர். கூட்டத்தை விலக்கி அவனை கருப்பு கோவிலுக்கு அழைத்துவரவே வெகு நேரமாயிற்று. மலையடிவாரத் தாமரைக் குளத்தைச் சுற்றிலும் பரந்து விழுதூன்றி நின்ற ஆலமரங்களி லெல்லாம் கிளை கொள்ளாமல் இளைஞர்கள் ஏறி அமர்ந் திருந்தனர். வாழ்த்தொலிகள் விண்ணை நிறைத்தன. அவை மனிதக் குரல்கள் போலில்லை;அமானுஷ்யமான ஏதோ ஆற்றல் பீறிட்டுக் கிளம்பியது போலிருந்தது.

மீண்டும் கருப்புவை வணங்கினான். அவருக்கு கோவில் கட்டித் தருவதாக வாக்களித்தான். உணவருந்தி விட்டுக் கிளம்பும்போது பெரியாம்பிளையிடம் சொன் னான் ‘இந்தக் கட்டாரியை எடுத்துச் செல்கிறேன். போர்க் களத்தில் தாதனூர் ஆற்றும் வீர சாகசத்தால் இதே கட்டாரி மீண்டும் கருப்பு கோவிலுக்கு வரக்கூடும்.’

குதிரையை உடனே மதுரைப் பாதையில் விடாமல் மக்களினூடே புகுந்து தாதனூரைச் சுற்றி வந்தான். குறுக்குமறுக்குமாகப் புகுந்து போனான். கூப்பிய அவன் கரங்கள் இறங்கவில்லை. எவ்வளவு உணர்ச்சிகரமான,எவ்வளவு எளிமையான மக்கள் இவர்கள்! என்ற வியப்பு கணந் தோறும் அவன் மனதில் தோன்றியது. அவன் கற் பனையில் வீசிய காற்று கள்ள நாட்டு நிறை கண்மாய் களின் நீரலைகளைத் தழுவிச் சென்றது; கட்டுகளைத் தூக்கி வரப்புகளில் ஓடிவரும் பெண்களின் வியர்ப்பை ஆற்றியது; கதிரடிக் களங்களில் தூற்றிய தானிய மணிகளைத் தழுவியபடி ஊர் ஊராய்ச் சென்றது. அம்மாவைத் தேடியவாறு தெருவிலிறங்கிய நடை பயிலும் குழந்தையின் கைக்கிண்ணத்திலிருக்கும் நெய்ச் சோற்றின் வாசனையை முகர்ந்தபடி வானிலேறியது.

25

தாதனூரிலிருந்து சென்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு முத்து வீரப்பன் கொங்கு மண்டலத்தில் சுற்றித் திரிந்தான். திடீரென்று அவனுக் குக் காய்ச்சல் கண்டது; முத்துகள் முளைத்தன. தம்மம்பட்டி பாளையக் காரன் அவனை வண்டியில் ஏற்றிக்கொண்டு அவசரமாகத் திருச்சிக்குச் சென்றான்.

அவன் அருகே நெருங்க யாரையும் வைத்தியர் அனுமதிக்க வில்லை. உடலெங்கும் பெரியம்மை பரவி யிருக்க அவன் நினைவிழந்து படுக்கையில் கிடந்தான். அவன் மனைவி முத்தம்மாள் ஏழு மாதக் கர்ப்பிணியாய் இருந்தாள். அவனைப் பார்க்க அவளை விடவேயில்லை. மங்கம்மாவின் மடியிலேயே முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்.

இரண்டாம் நாள் இரவு மங்கம்மாவின் அறையில் நுழைந்த வைத்தியர் மௌனமாக நின்றார். கண்ணீர் வழிந்தது. அதைக் கண்ட மங்கம்மா அப்படியே மயங்கிச் சரிந்தாள்.குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் விழித்துக் கொண்ட முத்தம்மா அனிச்சையாக அவனை அணைத்து மார்பிலே புதைத்தாள். காலடியில் அத்தை கட்டிலின் குறுக்காகச் சரிந்துகிடந்தாள். அமர்ந்திருந்தவள் அப் படியே உறங்கியிருக்க வேண்டும்.

இவனுக்காகத்தானா இத்தனை நாளும் காத்திருந்தேன்? அன்றே அவனோடு எரிந்திருக்கவேண்டும். நான் கெஞ்சிக் கதறியும் இவள் விடவில்லை. அணைத்து ஆறுதல் சொல்லித் தன் மடியிலேயே பொத்திப் பொத்திக் காத்து இவ்வளவு நாள் கடத்திக்கொண்டு வந்துவிட்டாள். என் மகனுக்காகத்தானா? இப்போது நாட்டுக்கு ஒரு ராஜா கிடைத்துவிட்டான். எனக்கு? அவன் இல்லாத இந்த உலகத்துக்கு என்ன அர்த்தம்? இதில் இருந்து நான் என்ன செய்யப் போகிறேன்? ஏன் இப்போதும் என்னை விடமாட்டேன் என்கிறாள்? பெற்று இருபத்திரண்டு ஆண்டுகள் தாலாட்டிச் சீராட்டி வளர்த்த தாயின் துயரை விடவா இரண்டு ஆண்டுகள் அவனோடு வாழ்ந்த என் துயரம் பெரியது? ஆம். அது அனைத்துக்கும் அப்பாற் பட்டது. அவனை இவர்களுக்குத் தெரியாது. பெற்ற தாய்க்கே தெரியாது. நான் மட்டுமே அறிந்த அவன்! எல்லாமுமாகி என்னை ஆட் கொண்டவன்; எல்லா வற்றையும் விலக்கிவிட்டு என் மார்பிலே முகம் சாய்த்து பனித்துளி போலப் படிந்திருந்தவன். என்னையன்றி யாரையும் தீண்டாதவன். ஏறிட்டும் பார்க்காதவன்! என் மடியில் தூங்கக் கிடைத்ததற்காக மட்டுமே இறைவனுக்கு நன்றி சொன்னவன். என்னை ஆராதிக்க மட்டுமே பிறப்பெடுத்தவன். என் விரல்களால் உண்பதற் காகவே உயிர் வாழ்ந்தவன். அவன் ராஜாவா? இல்லை, என் விரல்களில் வந்தமர்ந்த சிட்டு. தேன்சிட்டு. அருந்தி அருந்தித் திகட்டாமல் உடல் கிறங்கி உயிர் மயங்க வேற்றுலகில் நான் உயிர்த்திருக்க என்னுள் மறைந்து காணாமல் ஆனவன் இன்று எங்கு போனான்? நான் இல்லாமல் என்ன செய்வான்?

சட்டென்று எழுந்துபோய் சாளரத் திண்டில் இருந்த பன்னீர்க் குப்பியை எடுத்துக் கடகடவென்று குடித்து விட்டு வந்து படுத்தாள். தூக்கமா மயக்கமா என்று தெரியாமல் நினைவு தேய்ந்தது. வட்டவட்டமாக உயர்ந்து நிற்கும் அந்த பிரமாண்டமான தூண்களை ஒட்டியே ஓடி வந்தாள். தூண் மறைவிலிருந்து வந்த அவன் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு நடந்தான். அவள் குலுங்கிச் சிரித்தவாறிருந்தாள். யாளிகள் நிற்கும் தூண்களைக் கடந்து நடந்து கொண்டிருந்தான். பசுமை பொங்கிய காட்டின் பெருமர வரிசையைத் தாண்டி நடந்தான். மேலிருந்து அருவி கொட்டியது. அப்படியே அதற்குள் நுழைந்தான். நீர்ச்சிதறல்கள் போல் அவள் பொங்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

குழந்தையின் அழுகுரல் கேட்டு எழுந்த மங்கம்மா, அவளை எழுப்பப் போனபோது திடுக்கிட்டாள். முத்தம் மாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

தாதிகள் ஓடிவந்தனர். பிறகு வைத்தியர் வந்தார். ‘ஜன்னி வந்துருச் சும்மா. பிரசவிச்சு நாலு நாள்தான் ஆகுது. இனி கஷ்டம்’ என்றார். மங்கம்மா தரையில் விழுந்து கதறி அழுதாள். முத்தம்மாவின் உடல் உதற வாய் பிதற்றிக் கொண்டிருந்தது. ‘டேய்... ரங்கா... டேய்... கிருஷ்ணா...’

28

மங்கம்மாவின் பேரன் விஜயரங்க சொக்கநாதனுக்குப் பதினாறு வயதானது. ராணி தலைநகர் மதுரையிலேயே இருந்தாள். விஜயரங்கன் மதுரையிலும் திருச்சியிலுமாக இருந்தான். திருச்சியில் ராணியின் கண் காணிப்பில் இல்லாதபோது அவனுக்கு கூடாநட்பு ஏற்பட்டது. பெண் சகவாசத்தில் இறங்கினான். ராணிக்குத் தெரியவந்த போது அவனை அழைத்து வந்து மதுரையிலேயே நிரந் தரமாகத் தங்க வைத்தாள். அரண் மனைக்கு வெளியே அவன் ஆட்டங்கள் தொடங்கின. ராணி கண்டித்தும் அவனை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. அவன் போக்கை உணர்ந்த அரண்மனைச் சதிகாரர்கள் அவனைத் தங்கள் பகடைக் காயாகப் பயன்படுத்தத் தொடங்கினர். அவன் வாயாலேயே அச்சய்யாவுக்கும் ராணிக்கும் தொடர்பு என்ற வதந்தியைப் பரப்பினர். மங்கம்மாவின் வயது அப்போது ஐம்பத்தி ஏழு என்றாலும் வெறும் வாய்க்கு அவல் கிடைத்த கதையாயிற்று. அரச பதவியைத் தன்னிடம் தருமாறு பேரன் கேட்டான். அவன் திருமணத்திற்குப் பின் தருவதாகப் பாட்டி சொன்னாள். மணமகளாக நிச்சயித்திருந்த மீனாட்சி இன்னும் பூப்படையாமல் இருந்ததே திருமணம் தள்ளிப் போவதற்கான காரணம் என்றாள் ராணி. அவள் அழைத்தால் அவன் போவதில்லை என்ற நிலை வந்தது. சதிகாரர்களின் கைப்பாவையாகிப் போனான் விஜயரங்கன்.

தளவாய் உத்தப்ப நாயக்கர் அலுவல் நிமித்தம் திருச்சிக்குக் கிளம்பிப்போன நாளில் செயலில் இறங் கினான் விஜயரங்கன். அன்றிரவே அரண்மனையின் பிரதான பதவிகளில் அவன் ஆதரவாளர்கள் நியமிக்கப் பட்டனர். முக்கியமான படைத்தளபதிகளின் பொறுப்பு கள் பறிக்கப்பட்டன. ஆட்சி கைமாறிப் போனதை அறியாத மதுரை என்றும் போல விழித்தெழுந்தது.

புது மண்டபத்திற்கு வடக்கிலிருந்த, தான் கட்டிய புதிய மாளிகையில் விழித்தெழுந்த மங்கம்மா அறைக்கதவைத் திறந்தாள். வெளியே தாழிடப்பட்டிருந்தது. சாளரத்திற்கு ஓடினாள். இரவே வெளியிலிருந்து அடைக்கப்பட்டிருந் தது.

பெரும் பணத்தைக் கையூட்டாகப் பெற்றிருந்த வைத்தியர் ராணிக்கு அம்மை வார்த்திருப்பதாகவும் யாரும் சந்திக்கக்கூடாது என்றும் சொன்னார். நாட்கணக்கில் தண்ணீர்கூட இல்லாமல் அடைபட்ட அறையின் இருளுக்குள் ஓர் உயிர் கதறிப் புலம்பிக் கொண்டிருக்க, என்ன நடந்தது என்று தெரியாமல் புதிய ராஜாவைப் பற்றியும் ஆட்சி மாற்றத்தைப் பற்றியுமே மதுரை பேசிக்கொண்டிருந்தது. அம்மை வந்துவிட்ட தால் மங்கம்மா ராணி செலவு கணக்கில் சேர்ந்துவிட் டாள். அதனால்தான் தான் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதாக விஜயரங்கன் சொல்லிக் கொண்டிருந்தான். கதவைத் தட்டிக் கதறுவதால் பலன் ஒன்றுமில்லை என்று உறைத்த போது தன் நிலையை உணர்ந்தாள்.

பகலிரவு தெரியாத இருளுக்குள் பிறகு குரலின்றிக் கண்ணீர் மட்டும் வழிந்தது. மீனாட்சியை நினைத்துக் கை கூப்பினாள். ‘நான் செய்த பாவ மென்ன பாவமென்ன’ என்று மனம் மீண்டும் மீண்டும் மௌனமாய்க் கதறியது. மதுரையின் நன்மைக்காக அன்றித் தனக்காக எதையும் செய்யவில்லை என்று உறுதியாய் நம்பினாள். மண்ணை யும் விண்ணையும் ஆளும் தெய்வங்கள் எதனால் தன்னை நிந்தித்தன எனக் குழம்பினாள்.

ஒரு முடிவுக்கு வந்தவளாய் கட்டிலில் ஏறிப் படுத்தாள். பசியையும் தாகத்தையும் வலிந்து மறந்து இனிய நினைவு களுக்குள் போக முயன்றாள். பேரனும் அரண்மனை மனிதர்களும் நினைவிலிருந்து கழன்றனர்.

அன்ன சத்திரங்கள் வந்து மறைந்தன. நிறை குளங்கள் தோன்றி நீரலைகள் போலக் கலைந்து போயின. பொதிகை மலையையும் கீழக்கடலையும் தென் கடலையும் காவிரியையும் நீலமலையையும் தொடவிரி யும் நிழல் படிந்த கல்சாலைகள் தோன்றித் தோன்றி மறைந்தன.

சந்திரிகிரிக் குன்றுகளும் நிலவொளியில் ததும்பும் மாடமுகடுகளும் தாமரைத் தடாகங்களும் நந்தவனங் களும் தோன்றின. காலைப் பனியில் உடல் நடுங்க சிறுமி யாய் பன்னீர்ப் பூக்களைப் பொறுக்கினாள். அன்னையின் புன்னகை அரவணைத்தது. வேங்கட மலைச் சாரலெங்கும் தன்னந்தனியாய் குதிரையில் காற்றாய்ப் பறந்து திரிந்தபோது கண்ணில் தோன்றிய நிலக்காட்சிகள் துல்லியமாய் எழுந்து வந்தன. வாள் வீசும் பயிற்சியின்போது எந்தக் காயமும் இன்றிக் காலில் வழிந்த ரத்தத்தைக் கண்டு குழம்பி நின்ற சித்திரம் மீண்டு வந்தது. பெண்களின் சிரிப்பொலிகள் கொலு சொலிகள் கேலிகள்.

அவளைத் தீண்டத் தயங்கி முதலில் வெட்கப்பட்ட சொக்கன். அவளே கதியென்று அவள் காலடியிலேயே தஞ்சமடைந்து கிடந்த சொக்கன். அனைத்திலிருந்தும் தனித்து வேற்றுலகை வெறித்தவாறிருந்த சொக்கநாதன்.

மீனாட்சியே வடிவெடுத்து வந்துவிட்டாள் என்று அவள் போற்றிய முத்து. நீராட்டிச் சோறூட்டிச் சீராட்டிச் சிறகடியிலேயே காத்து... கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல். உடல் மரத்து நினைவுகள் அறுபட்டன. நினைவில் அவனே மிஞ்ச…