காவல் கோட்டம்: தமிழ்ப்புனைவின் வரலாற்றுச்சாதனை

செல்வ புவியரசன்

மக்கள் வரலாறு என்ற கோட்பாட்டினை சமீபத்தில் மறைந்த வரலாற்றறிஞர் ஹாவர்ட் ஸிண் அறிமுகப்படுத்தி வைக்க அது இப்போது உலகம் முழுவதும் வரலாற்றை நேரடியாகவும் புனைவாகவும் மறுவரைவு செய்ய வைத்திருக்கிறது. அந்நோக்கில் பார்த்தால் சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலின் புனைவுமுறையும் மக்கள் வரலாறு என்பதையே அடிப்படையாகக் கொண்டது. அதேநேரத்தில் காவல் கோட்டத்திற்கு அதைவிடவும் கூடுதல் சிறப்பும் இருக்கிறது. பேரரசு என்பதையும் மக்கள் என்பதையும் ஒன்றுக்கொன்று எதிரானதாக சு.வெங்கடேசன் முன்னிறுத்தவில்லை. மக்களைப் பேசுவதோடு நின்றுவிடாமல் பேரரசும்கூட ஆயர் இனக்குடிகளின் கூட்டுறவு காரணமாகவே சாத்தியப்பட்டது என்று அழுத்தம் திருத்தமாக அவர் நிறுவியிருக்கிறார். ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்காக ஒரு மொழி பேசும் இனக்குழுக்கள் எல்லாம் இணைந்து நின்றபோதும்கூட தமது தனித்துவம் காத்துக்கொள்வதற்காக அவர்கள் தமக்குள்ளும் சதா சண்டையிட்டுக்கொண்டுதான் இருந்தார்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். மக்கள் வரலாறு என்ற கோட்பாட்டில் மேலும் ஒரு முன்னகர்வு இது.

சரித்திரத்தின் மாபெரும் கதாநாயகர்களாக இருந்த யாவரையும் அவர்களது காலத்திலேயே இந்த நாவல் குறுக்கு விசாரணையும் செய்திருக்கிறது. பேரரசராக இருந்த கிருஷ்ண தேவராயரிடத்தில் "போர்க்களத்தில் கொல்லவாருகளைப் பலிகொடுத்து உருவாக்கிய ராஜ்ஜியத்தில் அவர்களுக்கென்று கால் வைக்க ஒரு பிடி மண் இல்லையே" என்று கொதிக்கிறார் நாகமர். கோவிலுக்கு கோவில் கையெடுத்துக் கடவுளை கையெடுத்துக் கும்பிட்டால் போதுமா என்று மதுரை மன்னர்களின் பொறுப்பின்மை சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மதுரைக் கோட்டையை தகர்க்கிற பிளார்க்பென் யாரும் கேள்வி கேட்காமலேயே சரித்திரச்சின்னத்தை பாழாக்குகிறோம் என்ற குற்ற உணர்ச்சியில் குமைந்துபோகிறான்.

தென்னிந்திய சரித்திர நூல்களில் ஒற்றைவரிச் செய்திகளாக கடந்துபோன சம்பவங்களுக்குப் பின்னால் எத்தகைய உணர்ச்சிப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன என்பதை இந்த நூலே அறிமுகம் செய்துவைக்கிறது. ராபர்ட் சீவல் எழுதிய மறக்கப்பட்ட பேரரசு நூல்தான் விஜயநகரப் பேரரசைப்பற்றி வெளிவந்திருக்கும் நூல்களிலேயே இன்றுவரை முதன்மையாக விளங்கிவருகிறது. அந்த நூலை ஆதாரமாகக் கொண்டு வெளிவந்த தென்னிந்திய வரலாற்று நூல்கள் பலவற்றிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் சங்கதி விஜயநகரப்பேரசை வித்யாரண்யர் என்ற பார்ப்பனர் சுல்தான்களுக்கு- இஸ்லாமியர்களுக்கு எதிராக உருவாக்கினார் என்பது. ஆனால் உண்மையில் அந்தப் பேரரசை உருவாக்கியது ஹரிகரரும் புக்கரரும் மட்டும்தான். அவர்கள் அரசை உண்டாக்கி பத்தாண்டுகள் கழித்தே வித்யாரண்யர் அவர்களோடு இணைந்துகொண்டார் என்பதை இந்த நாவல் கங்காதேவியின் வார்த்தைகளிலிருந்து பேசுகிறது.

வைணவத்தை வளர்த்தெடுத்தது விஜயநகரப் பேரரசு என்பதாகவே வரலாற்றுநூல்கள் சொல்லிக்கொடுக்கின்றன. ஆனால் அப்பேரரசினைச் சேர்ந்த ஒவ்வொரு இனக்குழுவும் தங்களது குல மூதாதையர்களை அதுவும் பெண் தெய்வங்களையே முதலிடம் கொடுத்து வணங்குகின்றன. காரணம் என்ன?

மதுராவிஜயம் எழுதி தனது கணவன் குமாரகம்பணனுக்கு கங்காதேவி பெருமை சேர்த்தாலும் அந்தப் போரை நடத்தி முடிப்பது அவளேதான். விஸ்வநாதனை மணந்துகொண்ட வீர நாகம்மாவும் அவளின் தொடர்ச்சிதான். அரசுப் பொறுப்பேற்று உட்பகையையும் வெளிப்பகையையும் ஒரு சேர சமாளிக்கிற மங்கம்மாவும் கங்காதேவியின் தொடர்ச்சிதான்.

கங்காதேவி எழுதிய மதுராவிஜயம் என்ற தலைப்புகொண்ட அத்தியாயத்தோடு இந்த நாவல் தொடங்கினாலும் முதலில் சொல்லப்படுவதென்னவோ சடச்சியின் கதைதான். கருப்பணனின் மனைவி சடச்சி தன் கணவன் காவலில் தவறிவிட்டான் என்ற அவப்பழி நேர்ந்துவிடக்கூடாது என்பதால் உயிர்விடும் தருவாயிலும் அவனைச் சண்டையிடச் சொல்கிறாள். சடச்சியின் வழித்தோன்றல்களும் அங்கம்மாக்கிழவி, கழுவாயி என்று நீண்டுகொண்டே இருக்கிறார்கள். ஆளும் பெண்ணும் காவல் பெண்ணுமாக ஒன்றுக்கு ஒன்று இணையாக தொடரும் இந்தச் சரித்திரப் பயணத்தில் அரசு தொடங்கி குடும்பம் வரைக்கும் யாவற்றையும் பெண்கள்தான் தீர்மானிக்கிறார்கள். போர்களை அவர்களேதான் நடத்துகிறார்கள். அவர்களின் மனதில்தான் வரலாற்றின் ஆறாத காயங்கள் என்றென்றும் நினைவில் நின்று உறுத்திக்கொண்டே இருக்கிறது. சரி பெண்கள் என்றாலே இப்படித்தானா? இல்லை. தனது அண்ணன் தோற்கடிக்கப்பட்டான் என்பதற்காக மனதில் பகையை சுமந்தபடி வரலாற்றின் மாபெரும் கதாநாயகனாகிய கிருஷ்ண தேவராயனையே இகழ்ந்து ஒதுக்கித்தள்ளி வாழும் துக்காதேவி தன்பக்கம் நியாயமில்லை என்பது தெரிந்த மறுகணமே பகையை துறக்கிறாள். அரச வாழ்வையும் துறக்கிறாள். ஒன்று பெண்கள் கண்ணகியாக இருந்து ராஜ்ஜியங்களை அழிக்கிறார்கள். இல்லையென்றால் மணிமேகலையாக மாறி அமுதசுரபியோடு அருள்புரிகிறார்கள்.

விஸ்வநாதனின் சிதையில் விழுந்து உயிரை வீர நாகம்மா தானே விரும்பி உடன்கட்டை ஏறுகிறாள் என்றால் மங்கம்மா உடன்கட்டை ஏற முடியாது என்று உறுதியாக மறுத்துவிடுகிறாள். வீர நாகம்மாவைப்போல ஆளுமைமிக்க ஒரு கணவன் அவளுக்கு வாய்க்கவில்லை. எனவே மகனைத் தயார்ப்படுத்துகிறாள். அவனுக்குப் பிறகு பேரனையும் தயார்படுத்த முனைகிறாள். எனவே பெண்களுக்கு கணவன் என்பது தனது வரலாற்றுக்கடைமையை ஆற்றுவதற்கான ஒரு உபகரணம். கணவன் இல்லையென்றால் மகன். அவனும் இல்லையென்றால் பேரன்.

பேரரரசர்களையே கதாநாயகர்களாக்கி அவர்களின் அகப்புற வாழ்க்கையின் புகழ்பாடும் சரித்திரப் புனைவுகளின் போக்கிற்கு நேரெதிராய் காவல் கோட்டம் முதன்மைப்படுத்துவதே பெண்களையும் படைத்தளபதிகளையும் காவல் உரிமைக்காக காலம் காலமாய் போராடிக்கொண்டிருக்கும் கள்ளர்குடிகளையும்தான். மதுரையில் இனக்குழுக்களின் கூட்டாச்சியாய் மக்கள் நல அரசை கட்டமைக்க முயன்ற விஸ்வநாதனும் அவன் வழியில் வந்த முத்துவீரப்பனுமே இவ்விதிக்கு விலக்கு.

கங்காதேவியின் மதுராவிஜயத்தில் ஒரு குறிப்பாக மட்டுமே எஞ்சியிருக்கும் பாண்டியரின் 'சந்திரஹாசம்' இப்புதினம் நெடுக படைத்தளபதிகளின் கைகளில் மாறிக்கொண்டே இருக்கிறது என்றால் விஜயநகர படைத்தளபதிகளின் வசமிருந்த "சாளுவ கட்டாரி" தாதனூர்க்கள்ளர்களை வந்தடைந்து பிரிட்டிஷ் அதிகாரியால் அபகரிக்கப்படுகிறது. காலம்தோறுமான அரசியல் மாற்றத்தை இணைக்கும் கண்ணியாக சந்திரஹாசத்தையும் சாளுவக்கட்டாரியையும் குறியீடுகளாக மாற்றியிருப்பது சு.வெங்கடேசனின் புனைவின் திறமுணர்த்தும் ஒரு சிறுகூறு.

சரித்திரம் என்பது கடந்தகாலச் சம்பவங்களுக்குக் காரணம் தேடும் ஆய்வுமுறையியல். ஆனால் சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமே அத்துறை தேங்கி நின்றுவிட்டது. அதைச்சார்ந்து தமிழில் உருவான புனைவுகளோ மேலும் மேலும் அளவுக்கு மீறி ஒப்பனை செய்யப்பட்ட கதாபாத்திரங்களையே உருவாக்கி உலவவிட்டன. காவல் கோட்டம் சரித்திரத்தை அகழ்ந்தெடுத்து அதன் காரண காரியங்களை அலசுவதோடு இனவரைவியல், சமூகவியல் ஆகிய சரித்திரத்தோடு நெருங்கிய துறைகளையும் துணையாகக் கொண்டு தமிழ்ச் சரித்திரப் புனைவுலகில் ஒரு புதிய எழுச்சியை உருவாக்கியிருக்கிறது. தரவுகளின் ஆதார வலுவில் மட்டுமின்றி அதை இலக்கியமாக சமைத்தெடுத்ததிலும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது காவல்கோட்டம்.

இந்த நாவலை படிக்கும் ஒரு வாசகன் போர்க்கலையின் சாகசங்களைப்போலவே களவின் சூக்குமங்களாலும் மனம் கவரப்படுவான். களத்தில் படையினரின் அணிவகுப்பும் அவர்களுக்கு இடையிலான பணிப்பங்கீடுகளும் பற்றிய துல்லியமாக விவரிப்புகளைப் போலவே இரவின் சிறுபொழுதுகளும் அவ்வவ்வேளைகளில் பறவைகளும் மிருகங்களும் உணர்த்திச் செல்லும் குறிகளும் அதன் பொருளுணர்ந்துகொள்ளும் இனக்குழு சார் அறிவும் வாசகன் மனதை பதற்றம்கொள்ளச் செய்பவை. காரணம் களவழியும் களவின் வழியும் உயிரைப் பணயம் கோருபவை. மதுரை மன்னர்களிடம் காவல் உரிமையை கோரிப் பெறுவதற்கான ஒரு வலுவான உத்தியாகவே கருதப்பட்டுவந்த களவு பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உதவியது காலத்தின் கட்டாயமே.

"களவு ஒரு வினோதச் செய்கை. பறவைக்கும் மீனுக்கும் மட்டுமே தெரிந்த தடமற்ற பயணத்தின் ரகசிய நெடுவழி" என்பதாக இந்நாவலில் ஒரு வரி வருகிறது. சு.வெங்கடேசன் கவிஞராகவும் இருப்பதால் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் பக்கம் பக்கமாக எழுத வேண்டியதையெல்லாம் ஒன்றிரண்டு வார்த்தைகளால் குறிப்புணர்த்திக்கொண்டே போகிறார். ரேகையைப் பதிந்துவிட்டோம் என்று ஊர் பெரியாம்பிளை சிலுக்கானியை எடுத்து தொண்டையில் குத்திக்கொண்டு செத்துப்போனார் என்ற வரியை அடுத்த பத்தியில் சிலுக்கானியை எடுத்து தொண்டையில் குத்திக்கொண்டு அந்த ஊரே செத்துக்கிடந்தது என்ற வாக்கியம் வருகிறது. இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது, அது மக்களிடத்தில் ஏற்படுத்திய மனவேதனை என்னவென்பதை வாசகனுக்கு குறிப்புணர்த்திவிட்டு நகர்ந்துகொண்டே இருக்கிறார். கட்டாய சிறை முகாமில் காடுகளை வெட்டியழிக்கிற பணியில் வதைபடுகிற கள்ளர்களைப் பற்றி எழுதும்போது "பெரியவர்கள் மரங்களாக மாறி ஒவ்வொரு நாளும் வெட்டப்பட்டு வீழ்ந்தபடியே இருந்தார்கள்" என்று அவர்களின் அத்தனை துயரங்களையும் ஒரே வாக்கியத்தில் எழுதிவிட அவரால் முடிந்திருக்கிறது. "அரசுக் கட்டிடங்கள் இருக்கும் பகுதி அதற்கே உரிய அமைதியைக் கொண்டிருந்தது" என்பது போன்ற அங்கதங்கள் இடையிடையே ஆழமாக வேல்பாய்ச்சவும் செய்கின்றன. இந்நாவல் நெடுக விரவிக்கிடக்கும் இதுபோன்ற வாக்கியங்களைப் பட்டியலிட்டால் அதுவே ஒரு நூலாகிவிடும்.

ஆணும் பெண்ணும் குழந்தைகளும் களத்தில் நின்று போராடியும் எதிரிகளால் எப்படி தோற்கடிக்கப்பட்டார்கள்? எதிரிகளின் வீரத்தால் அல்ல, விவேகத்தால் அல்ல, அவர்களிடம் இருந்த வலிமையான ஆயுதத்தால் மட்டுமே. காவல் கோட்டத்தின் விவரிப்புகள் சமகாலத்திலும் தொடர்கின்றன என்பது வேதனைதான்.

"பெண்மனதில் வஞ்சினம் அணையாது. அதை முலைப்பாலோடு குழந்தைக்கும் புகட்டுவாள். தலைமுறைகளுக்கு அது ரத்தத்தில் எரிந்துகொண்டிருக்கும்."

தாமரை, ஜனவரி 20