காவல் கோட்டம் - சில பகிர்வுகள்

எம்.ஏ.சுசீலா

ஒரு கலைப்படைப்பை,முன் அனுமானங்களுடனும் முன் முடிவுகளுடனும் ஏற்கனவே நம்முள் செலுத்தப்பட்ட சில அபிப்பிராயங்களுடனும் அணுகுவது பெரும்பிழை என்பது நெடுநாட்களாக நான் வரித்துக் கொண்டிருக்கும் கோட்பாடு. அதனாலேயே ஒரு நாவலைப் படிக்க வேண்டுமென்று தீர்மானித்தாலும், ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டுமென்று முடிவு செய்தாலும் அது குறித்த விமரிசனங்கள்,மதிப்புரைகள் ஆகியவை வெளியாவதற்கு முன்பே அதைப் பார்க்கவோ/படிக்கவோ செய்து விட வேண்டுமென்று நினைப்பேன்.

காவல் கோட்டம் நாவலைப் பொறுத்தவரை –இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அதைப் படிக்கும் சூழல் வாய்த்ததால் மூலத்தைப் படிப்பதற்கு முன்பே அது சார்ந்த நேர்/எதிர் சார்பு கொண்ட மதிப்புரைகள்,பாராட்டுக்கள்,புகழுரைகள்,கண்டனங்கள்,காழ்ப்புக்கள் என்று பிற எல்லாமே கண்ணில் பட்டு அவற்றைப் படிக்கவும் செய்து விட்டேன்; ஆனாலும் அவற்றால் மூலநூல் வாசிப்புக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதோடு மேலே குறிப்பிட்டிருக்கும் என்னுடைய நிலைப்பாடு சரியானதுதான் என்று எனக்கு நானே உறுதிப்படுத்திக் கொள்ளவும் அது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.

ஒரு படைப்புக்குள் முழுவதும் பயணப்படாமல்,அதில் துடிக்கும் ஜீவனை அறிந்து கொள்ள முற்படாமல் அது சார்ந்து எழுதப்படும் விமரிசனங்கள்,எதிர் விமரிசனங்கள்,பின்னூட்டங்கள் என்று அந்த இழையை மட்டுமே தொடர்ந்து கொண்டு செல்லும்போது குறிப்பிட்ட படைப்பிலிருந்து நாம் அந்நியப்பட்டு விடுவதோடு – படைப்பின் அகச் சாரத்தை விடவும் புறவயமான கருத்துக்களின் மீது மட்டுமே நம் ஈடுபாடும்,சுவாரசியமும் மையம் கொண்டு விடுகின்றன.அதிலேயே லயித்துப் போய்ச் சுவை கண்டவர்களாய் வம்பான ஒரு மனநிலைக்கு நாம் சென்று சேரவும் அது வழி வகுத்து விடுகிறது. ஒரு கட்டத்தில் அந்தப் படைப்பை நாமே படித்து முடித்து விட்டது போன்ற கற்பிதமும் கூட நம்முள் தலைகாட்டத் தொடங்கி விட..,அவ்வாறான போலி பாவனைகளுடனேயே நாம் பேசவும் தொடங்கி விடுகிறோம் என்பதே இதன் வினோதம்..மாறாகக் குறிப்பிட்ட அந்தப் படைப்பைப் படித்து நமக்கென்று ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டபிறகு, அது சார்ந்த மதிப்புரைகளை வாசித்தால் அப்போதுதான் அவை எந்த அளவுக்கு நேர்மையாகப் பதிவாகியிருக்கின்றன என்பதைத் தெளிவாக எடை போட முடியும். இலக்கிய வாசிப்பிலுள்ள சில ஆபத்தான போக்குகளைச் சுட்டிக் காட்டுவதுதான் இதை எழுதியதற்கான காரணமே தவிர இதன்வழி,இன்னுமொரு இலக்கிய அரசியலுக்குக் கால்கோளிடுவது என் நோக்கம் அல்ல.

இனி…காவல் கோட்டம்….[இதை ஒரு மதிப்புரை அல்லது திறனாய்வாக முன் வைக்காமல் இந்த நாவலின் வாசிப்பு சார்ந்த என் உணர்ச்சிகரமான அனுபவங்களை மட்டுமே இங்கு பதிவு செய்திருக்கிறேன்]

காவல்கோட்டத்தைப் பொறுத்தவரை அது என்னை வசீகரித்ததற்கான முதல் காரணம்…அது நான் நேசிக்கும் மதுரையின் வரலாற்றைப் பேசுவது என்பதும் மதுரையை மையம் கொண்டதாக அதன் நிகழ்வுகள் சுற்றிச் சுழல்வதும்தான்…

என் ஆயுளின் உயிர்த் துடிப்பான முப்பத்தாறு ஆண்டுகள் மதுரையிலேதான் கழிந்திருக்கின்றன.…. என்னோடும்.. என் உணர்வுகளோடும்..என் வளர்ச்சியோடும்,என் ஏற்றத் தாழ்வுகளோடும் பிணைந்திருந்த மதுரை…,என் சந்தோஷத்திலும்,சஞ்சலத் தருணங்களிலும் என் உடனிருந்த மதுரை…,மொட்டாக இருந்த என் ஆளுமையைச் செதுக்கி இன்றைய நானாக என்னை மாற்றியிருக்கும் மதுரை…என்னைப் பொறுத்தவரை அது ஒரு ஊர் அல்ல..என் உற்ற தோழி அது..!

அந்த நான்மாடக் கூடலின் கண் வழியாகவே காவல்கோட்ட நாவல் வாசிப்பு என்னுள் விரிந்தது.பாண்டியக் கொடி பறந்த மதுரை, ,சங்கம் கண்ட மதுரை ..,கடல் கொண்ட மதுரை - மாலிக் காபூரின் படையெடுப்புக்கு ஆட்படுவதில் தொடங்கி,விஜயயநகர அரசர்களின் வசமாவதில் தொடர்ந்து, நாயக்க அரசர்களால் சீரமைக்கப்படுவதில் வளர்ந்து பிரிட்டிஷாரின் பிடிக்குள் இருப்பது வரை விரிந்து கொண்டு செல்லும் காவல் கோட்டம் மதுரையின் அழியாத சித்திரத்தை என்னுள் நிறுத்தி என் நினைவுகளை மீட்டெடுத்துக் கொள்ள உதவியது.

மதுரை நகரின் வீதி அமைப்புக்கள் மிகச் சீரானவை;ஒழுங்கான ஒரு வரையறைக்குள் அடங்குபவை..

’’மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

பூவொடு புரையும் சீறூர்

பூவின் இதழகத்து அனைய தெருவம்’’என்கிறது பரிபாடல்.

மாயவனாகிய திருமாலின் நாபிக் கமலத் தாமரையின் உள் மொட்டுப் போலக் கோயில்,, அதைச் சுற்றி அடுக்கடுக்காய் விரியும் இதழ்கள் போலக் கோயிலைச் சூழ்ந்திருக்கும் தெருக்கள் என்ற அந்த வருணனைக்கேற்ப..மீனாட்சியன்னையின் ஆலயத்தைச் சுற்றி..சித்திரை வீதி,ஆவணிமூல வீதி,மாசி வீதி.வெளி வீதி என நான்கு திசைகளிலும் விரிந்து கிடக்கும் தெருக்கள்…அந்தத் தெருக்களைக் குறுக்கு நெடுக்காக இணைக்கும் சரடுகளாக நான்கு திசைகளிலுமே அமைந்திருக்கும் வடம்போக்கி,பெருமாள் மேஸ்திரி ,மாரட் தெருக்கள்! உலகின் வேறு எந்த அதிசயமான தெருவும் கூட மதுரை வீதிகளில் சஞ்சரிக்கும் சுகத்தை எனக்கு அளித்ததில்லை. பெருவீதிகள் மட்டுமன்றி இங்குள்ள மூலை முடுக்குகள்..சந்து பொந்துகள்..இண்டு இடுக்குகள் ,அருகிலுள்ள சிற்றூர்கள் என எல்லா இடங்களிலுமே கால் தேயத் தேய நான் சுற்றியலைந்திருக்கிறேன் என்பதோடு ஆண்டுக்கு ஓரிரு முறையே மதுரை செல்லும் இப்போதும் கூட நகரத்துத் தெருக்களுக்குள் இலக்கற்றுத் திரிவதற்காகவே ஒரு நாளை ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்.அந்த அளவுக்கு அந்த மண்ணோடும்,அந்த இடங்கள் ஒவ்வொன்றோடும் முந்தைய நாட்களில் நான் பெற்ற அனுபவக் கணங்களோடு கூடிய நினைவு முடிச்சுகள் பின்னிப் பிணைந்து கிடப்பதால்,காவல் கோட்டத்தில் விரியும் மதுரை வருணனை,என்னுள் சொல்லால் விவரிக்க இயலாத மன எழுச்சியை உண்டாக்கியது..தெருவாக மட்டுமே இது வரை பார்த்துவந்தவற்றின் மூலமான மனிதர்கள்,பெருமாள் மேஸ்திரியாகவும் மாரட்துரையாகவும் நாவலில் என் முன் பாத்திரங்களாக வந்து நிற்பதைக் கண்டேன்.மங்கம்மா சத்திரமாக,மங்கம்மாளின் அரண்மனையாக,நாக மலையாக,அனுப்பானடியாக,வண்டியூராக மதுரை பற்றிய சித்திரத்தை என்னுள் விரித்துக் கொண்டே சென்றது நாவல்.மதுரையின் வீதிகள் அனைத்திலும்,அதன் நரம்போட்டமாகப் படர்ந்து கிடக்கும் குறுக்குச் சந்துகளிலும் காவல் கோட்டத்துக் கள்வர்களோடும்,காவலர்களோடும் நானும் சுற்றித் திரிவதான பிரமையை என்னுள் கிளர்த்தியது நாவல்..

நாவலில் என்னை ஈர்த்த மற்றுமோர் அம்சம்..இதில் இடம் பெறும் பெண்களின் வீரியம் மிக்க ஆளுமை. பொதுவாகப் பெண் பாத்திரங்களைக் காதலிகளாகவோ, மதிக்கத் தகுந்த வீர மங்கையராகவோ -இந்த இரு நிலைகளில்மட்டுமே பெரும்பாலான வரலாற்றுப் புதினங்கள் இது வரை பதிவு செய்து வந்திருக்கின்றன(சிவகாமியின் சபதம் ஒரு விதி விலக்கு);ஆனால் காவல் கோட்டம் நாவலில் வரும் பெண்களைப் பற்றிய பதிவுகள் இந்தப் பொதுப் போக்கிலிருந்து பெரிதும் மாறுபட்டவையாகப் பல நிலைகளில்..பல தரங்களில் உள்ளபெண்களின் ஆளுமைத் திறனை,அவர்களின் துணிவை,நிர்வாகத் திறனை,அவர்களிடமிருந்து பெருகும் கருணை ஊற்றை,அவர்களது நாட்டு பற்றை,இலக்கியப் படைப்பாக்கத் திறனைப் பதிவு செய்திருக்கின்றன என்பது இந்த நாவலைப் பெண் நோக்கில் முக்கியத்துவம் கொண்ட ஒரு படைப்பாகக் காட்டுகிறது.

''நாவலே சடச்சி, கங்காதேவி என்ற இரண்டு பெண்களுடைய வழித்தோன்றகளைப் பற்றித்தான்''என்று நாவலாசிரியர் சு.வெங்கடேசன் குறிப்பிடுவது போல இந்த நாவல் முதன்மைப்படுத்தும் பிறமலைக் கள்ளர்[சடச்சி] கொல்லவாருகள்[கங்காதேவி]ஆகிய இரு இனக் குழுக்களுமே குறிப்பிட்ட அந்தப் பெண்களின் வழி வந்தவர்களாகவே உள்ளனர்.

மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரைக் காவலில் இருக்கும் கருப்பணனைக் ’’காப்பாத்து..இல்லேன்னா சாகு’’என்னும் அவன் மனைவி சடச்சியின் வார்த்தைகளே உலுக்கியெழுப்புகின்றன.தொடர்ந்து விஜயநகரப் பேரரசு சுல்தான் மீது தொடுக்கும் போரின் தொடக்கமாகத் தன் கழுத்தைத் தானே சீவியபடி,போரின் களபலியாகத் தன்னை ஆக்கிக் கொள்ள முன் வருகிறாள் கனகநூகா. குமாரகம்பணனின் மாபெரும் சக்தியாக இருந்து மதுரைப் படையெடுப்புக்கு அவனை இயக்கி’மதுரா விஜயம்’ என்னும் படைப்பையும் எழுதுகிறாள் கங்காதேவி..அடுத்து அமையும் நாயக்க அரசில் .

சதியாக மறுத்து ஆட்சிப் பொறுப்பேற்று மகனை இழந்த பின்னும் நற்பணிகள் பலவற்றை விடாமல் தொடர்ந்து பின்னாளில் தன் பேரனாலேயே சிறை வைக்கப்படுகிறாள் ராணிமங்கம்மா.அவளது தனித்த ஆளுமை துலங்கும் இரு கட்டங்கள் நாவலில் இவ்வாறு விரிகின்றன.சக்கிலிய இனத்தைச் சேர்ந்த ஒருவனின் வீரத்தை மெச்சி அவனிடம் சாளுவக் கட்டாரியை வழங்கி மதுரை அரண்மனையின் காவல் பொறுப்பேற்க அவனுக்கு அழைப்பு விடுக்கிறாள் மங்கம்மா.அவனோ அன்றைய சாதி அமைப்புக்கு அஞ்சி ஒடுங்குகிறான்.

‘’ஒரு சக்கிலியனை அரண்மனைக் காவல் தலைவனாக யாரும் ஏற்க மாட்டார்கள்;எங்கள் விதிபோர்க்களத்தில் இரத்தம் சிந்துவது மட்டும்தான்’’என்கிறான் அவன்.

’’இது என் அரண்மனை,என் நாடு..இங்கு விதியை நான் மாற்றுவேன்’’ என்று அதற்கு மங்கம்மா கூறும் துணிச்சலான விடையை இன்றைய தலைவர்கள் சொல்வதும் கூடக் கடினம்தான்..போர்முகத்தில் காட்டும் வீரத்தோடு சமூகநீதி காக்கும் வீராங்கனையாகவும் உருவாகியிருக்கிறது ராணி மங்கம்மாவின் பாத்திரம்.

பேரனால் சிறை வைக்கப்பட்டுச் சிறையில் இருந்தபடியே மடிய நேர்ந்தாலும் அவளின் உரமும் திட்பமும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன.தான் இறக்கும் தருவாயிலும் கூடத் தான் செய்த நல்லவற்றையே நினைத்துப் பார்த்தபடி உயிர் துறக்கிறது பொதுநலமே வாழ்வாய்க் கொண்டு இயங்கிய அந்த நெஞ்சம்.

‘’ஒருமுடிவுக்கு வந்தவளாய்க் கட்டிலில் ஏறிப் படுத்தாள்;..பசியையும் தாகத்தையும் வலிந்து மறந்து இனிய நினைவுகளுக்குள் போக முயன்றாள்.பேரனும் அரண்மனை மனிதர்களும் நினைவிலிருந்து கழன்றனர்;அன்ன சத்திரங்கள் வந்து மறைந்தன;நிறை குளங்கள் தோன்றி நீரலைகள் போலக் கலைந்து போயின; பொதிகை மலையையும்,கீழக்கடலையும்,தென்கடலையும்,காவிரியையும்,நீலமலையையும் தொட விரியும் நிழல் படிந்த கல்சாலைகள் தோன்றித் தோன்றி மறைந்தன’’என அவள் வாழ்வின் கடைசித் தருணம் நாவலில் அகச் சித்திரமாய் விரிகிறது.

மேற்குறித்த பெண்களோடு...விளிம்பு நிலைப் பெண்களும் கூட ஆளுமையில் கொஞ்சமும் சளைக்காதவர்களாகவே வெளிப்படுகின்றனர்.

தாது வருடப் பஞ்சம் வந்தபோது தன் செல்வம் முழுவதையும் கரைத்து ஊருக்கே கஞ்சி ஊற்றி நாதியற்றவர்களின் தெய்வமாகவே மாறிப் போகும் தாசி குஞ்சரம்மா, தன் இனத்தை வதைக்க முனையும் ஐரோப்பியக் காவலனின் கழுத்தைக் கடித்துக் குதறும் கிழவி, மன்னனின் அந்தப்புரத்துக்கு நிரந்தரமாய்க் குடியேற வேண்டுமானால் வைகைக் கால்வாய் ஒன்றைத் தங்கள் ஊருக்குத் திருப்பி விட வேண்டுமென நிபந்தனை போடும் ராஜம்மா-[கூத்தியார் குண்டு]- என்று விஜயநகரப்பெண்களாக... நாயக்கர் பெண்களாக..,கள்ளர் பெண்களாக.... நாவலெங்கும் பெண்களின் பன்முகங்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

***

காவலும்,களவும்

‘’காவலும் களவும் மிக நெருக்கமான இணை கோடுகள்;எந்த நேரத்திலும் ஒன்றை இன்னொன்றாக மாற்ற முடியும்’’என்று கூறும் ’காவல் கோட்டம்’நாவல், காவல்-களவு என்னும் இருமைகளுக்கிடையே விரியும் வரலாற்றுப் புனைவாகவே உருப்பெற்றிருக்கிறது. காவலரே கள்வராகவும் கள்வரே காவலராகவும் உருமாறும் மாயத்தையும் இப் படைப்பு நிகழ்த்துகிறது.

மதுரையின் காவல் பொறுப்பை ஏற்றிருக்கும் குறிப்பிட்ட பிரிவினர் மாலிக் காபூர் படையெடுப்பிற்குப் பிறகு அந்த உரிமையை இழந்து கள்வர்களாக மாறித் தாதனூர் என்னும் சிற்றூரில் குடியேறும் கள்ளர்களாகிறார்கள். கால ஓட்டத்தில் மதுரை விஜயநகரப் பேரரசுக்கு உரியதாகிப் பிறகு அங்கே நாயக்கர் ஆட்சியும் நிலைபெற்றுச் சில காலம் கழிந்த பிறகு அந்த உரிமை அவர்களுக்குக் கிடைப்பதைக் கீழ்க்காணும் சம்பவத்தின் வழி விவரிக்கிறது நாவல்.

தாதனூரைச் சேர்ந்த கழுவன், கட்டுக்காவல் மிகுந்த திருமலை நாயக்கர் அரண்மனையில்கன்னம் வைத்து நுழைந்து மன்னரின் அரசமுத்திரையைத் திருடிக் கொண்டுசென்று விடுகிறான். அரசன் அப்போது அடைந்த பேரதிர்ச்சியை..

’’திகைப்பின் உச்சிக்கும்,ஆச்சரியத்தின் விளிம்புக்கும் இடையில் கட்டப்பட்டிருந்த பெரும் கயிற்றின் மேல் கால்கள் நடுங்க மன்னன் நடந்து கொண்டிருந்தான்’’ என்று விவரிக்கிறார் ஆசிரியர்.

அரச முத்திரையைத் திரும்பக் கொண்டு வருபவனுக்குச் சன்மானம் அளிக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட, தாதனூர்க்காரர்களே துப்புப் பேசிக் கழுவனைக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். காவல் கட்டுப்பாடு மிகுந்த அரண்மனைக்குள் தான் புகுந்து திருடிய சூட்சுமத்தை அவையில் கதையாக விரிக்கிறான் கள்வன்.

‘’கள்வன் பிடிபட்டதும் சபை மையத்தில் தனது இடுப்பில் வைத்திருந்த களவின் மந்திரப்பொடியைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவ ஆரம்பித்தான்….உன்னிப்பாகக் கேட்ட அவர்கள் இருள் மடிப்புக்களின் உள்ளே இழுக்கப்பட்டனர்.அந்த ராஜசபையைக் கம்பளி போலச் சுருட்டிக் கன்னம் போட்ட ஓட்டை வழியே உருவி எடுத்துக் கொண்டான்’’

செய்தது களவுதான் என்றபோதும் அவனது அசாத்திய சாமர்த்தியம் கண்டு வியந்து போகும் திருமலை மன்னர், திருடிய குற்றத்துக்காகக் கழுவனுக்கு மூன்று சவுக்கடிவிதித்து விட்டுக் கோட்டைக் காவலன் பொறுப்பை அவனுக்கே அளித்து விடுகிறார்.[தான் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்த கன்ன வாசலைத் தன் நினைவாக மூடாமல் வைத்திருக்குமாறு அவன் கோரிக்கை விடுக்க நாயக்க மன்னரும் மென்னகையோடு அவனது வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறார்]

சுல்தானின் படையெடுப்பில் இழந்த காவல் உரிமையை தாதனூர்க்காரர்கள் மீண்டும் பெறும் இந்தக் கட்டமே நாவலின் மையத்தை நோக்கிக் கதையை நகர்த்தும் தொடக்கப் புள்ளி. எனினும் இந்த மக்களின் வரலாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசர்களாய் நாட்டை ஆண்ட காவலர்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தபடியே தொடர்ந்து கொண்டிருப்பதால் ராஜ வம்சங்களின் தொடர்ச்சியை..அவர்கள் நிகழ்த்திய போர்களை அழிவுகளை விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியமும், அந்தந்தச் சூழலுக்கு ஏற்பக் கள்ளர் இனத்தவரின் தொழில் முறைகளில் ஏற்படும் மாற்றங்களை விரிவாகக் காட்ட வேண்டிய தேவையும் நாவலுக்கு நேர்கிறது.

காவல்காப்பவனின் கையிலிருப்பது காவல் தடியா,களவுக்கான கன்னக் கோலா என்பதை ஆட்சியாளர்களே முடிவு செய்கிறார்கள்.

‘’களவுக்குப் போய்த் திரிந்தவன் காவல்காரனாக மாறினால் மொண்டிக் கம்பாகவும் நிலையாள் கம்பாகவும் இருந்த கம்பு காவல் கம்பாக மாறி விடும். அவனே காவல் முழுவதும் பார்த்து வயோதிகத்துக்கு உயிரோடு இருந்தால் அவன் கையிலிருக்கும் கம்பு ஊண்டு கம்பாகிறது.’’

தங்களின் தனி உரிமை எனத் தாதனூர்க்காரர்கள் கருதும் ஊர்க்காவல் மற்றும் குடிக் காவல் பொறுப்பு எப்போதெல்லாம் தங்களிடமிருந்து கை நழுவிப் போகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கள்வர்களாக உரு மாறிக் கொண்டே இருப்பதைப் பல நிகழ்வுகள் மற்றும் கிளைக் கதைகளின் வழி உறுதிப்படுத்தியபடியே நகர்ந்து செல்கிறது நாவல்.

‘’காவலும் களவும் தாதனூரின் ரெட்டைப் பிள்ளைகள்;கஞ்சியை உறுதிப்படுத்தக் காவலும்,காவலை உறுதிப்படுத்தக் களவும் என்று விதி செய்து கொண்டார்கள்’’

நாவலில் இடம் பெறும் மதுரைக் கோட்டையின் நிர்மாணமும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அதன் தகர்ப்பும் கூடக் குறியீட்டுப் பொருள் கொண்டதாகக் கள்ளர் இனத்தவரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைச் சுட்டுவதாகவே தொனிக்கிறது.

விசுவநாதநாயக்கர் காலத்தில் கோட்டை விரிவாக்கிக் கட்டப்படுகிறது; அது போலவே நாயக்கர் காலத்தில் கள்ளர் இனத்தவரும் முன்பு தாங்கள் இழந்த காவல் உரிமையைப் பெறுகிறார்கள். மதுரை, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்டு, பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடியும் அங்கே பறக்கத் தொடங்கியதும் மதுரை நகரின் விரிவாக்கம் கருதிக் கோட்டையை இடிக்க உத்தரவிடுகிறார் கலெக்டர் பிளாக்பெர்ன். அதன் பிறகு தொடர்ந்து நடக்கும் பல நவீன நிர்வாகச் சீரமைப்புக்களில் காவல் துறை.,காவல் நிலையங்கள் போன்ற அமைப்புக்கள் முகிழ்க்கத் தொடங்குகையில் கள்ளர்கள் தங்கள் அதிகாரத்தைப் பறி கொடுக்க நேருகிறது.

கோட்டை இடிபடும்போது, “கண்ணீர் கசிந்து இறங்குவது போலக் கருங்கல் சுவரில் இருந்து சாமிகள் இறங்கின. ...இருள் பரப்பி நிற்கும் மதுரையின் வீதிகளில் ஆங்கார ஓசையும் உடுக்கைச் சத்தமும் கதறலும் கேட்க ஆரம்பித்தது…எட்டுப்பேர் இழுத்துப்பிடிக்க சங்கிலிக் கருப்பன் இறங்கியபோது கோட்டையே பிய்த்துக் கொண்டு வருவதுபோல் இருந்தது. அவன் இறங்கிய வேகத்தில் முதுகில் இருந்த கோட்டையை உலுக்கிவிட்டு இருளில் சுருண்டு கிடந்த வீதிகளை வாரிச் சுருட்டியபடி போனான்.” என்று நரபலி கொடுத்துக் கோட்டையில் அமரச் செய்யப்பட்ட காவல் தெய்வங்களான தெற்கு வாசல் ஜடாமுனி, கிழக்கு வாசல் வண்டியூர் மாரியம்மாள் மேற்கு வாசல் கொத்தளத்து முனி என ஒவ்வொரு தெய்வமும் அலறிக் கதறியபடி வெளியேறுவதான உச்சமான காட்சி அதுவரை மதுரையின் காவல் பொறுப்பாளர்களாக இருந்த ஓர் இனத்தின் வீழ்ச்சியையே குறியீடாக முன் வைத்திருக்கிறது என்று கூறலாம்.

‘’இந்தக் காட்சியை நுட்பமான குறியீட்டுத் தன்மையுடன் எழுதியிருக்கிறார் சு.வெங்கடேசன்.’’என்று எழுத்தாளர் ஜெயமோகனும் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார். காவல் தெய்வங்களாகிய குலசாமிகளின் கதையைக் குலப் பாடகர்கள் பாடக் கேட்கும் கலெக்டர் பிளாக்பெர்னுமே கூட நீண்டு செல்லும் அவர்களின் பாரம்பரியத் தொடர்ச்சி கண்டு சற்றே பிரமித்துப் போய் விடுகிறார்.

தாதனூர்க்காரர்களின் காவல் உரிமை பிரிட்டிஷாரால் ரத்து செய்யப்படும் சூழல் ஏற்படுகையில்,அதை எதிர்த்தவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் அல்லது சிறை பிடிக்கப்படுகிறார்கள்.குற்றப் பரம்பரைச் சட்டம் கொண்டுவரப்பட்டுத் தாதனூர்க்காரர்களின் கைரேகைகள் பதிவாகின்றன; அவர்கள் மீது நிகழும்[பெருங்காமநல்லூர்]துப்பாக்கிச் சூட்டோடு நிறைவு பெறுகிறது நாவல்.

***

களவும் இருளும்

‘’களவு ஒரு விசித்திர செய்கை; பறவைக்கும் மீனுக்கும் மட்டுமே தெரிந்த தடமற்ற பயணத்தின் ரகசிய நெடுவழி’’ என்று கவித்துவமான மொழியில் களவை முன் மொழியும் காவல் கோட்டம் களவுக் கலையின் நுட்பங்கள் பலவற்றையும் விரித்துரைத்துக் கொண்டே செல்கிறது. இந்த விவரிப்புக்களின் வழி நாவலாசிரியர் களவை மேன்மைப்படுத்த முயல்கிறார் என்று கூறுவது பொருத்தமாகப் படவில்லை. ’களவும் கற்று மற’ என்பது நம் சமூகத்தில் நெடுநாட்களாய் நிலவும் வாசகம். களவுத் தொழிலில் கை தேர்ந்தவர்களாய்,அதன் சகல பரிமாணங்களையும் அறிந்து வைத்திருப்பதனாலேயே எந்த இடத்தில் புகுந்து எவ்வாறு களவை முறியடிப்பது என்னும் தந்திரம் தெரிந்து எல்லாவற்றுக்குள்ளும் ஊடுருவும் காவல் பணியாளர்களாகவும் அவர்கள் மாற முடிகிறது.காவல் பணியைத் திறம்படச் செய்யும் அவர்களின் ஆற்றலுக்கான பின்புலம், காலம் காலமாகக் களவிலும் ஊறி உட்கலந்து அதன் சூட்சுமங்களில் தேர்ச்சி பெற்றதாலேயே விளைந்திருக்கிறது என்பதற்கு அழுத்தம் சேர்ப்பதற்காகவே களவு சார்ந்த பகுதிகள் சுவையான தகவல்களாகவும்,நிகழ்வுகளாகவும் நாவல் முழுவது இடம் பெற்றிருக்கின்றன.

நகரக் காவல் செய்வோரும் கள்வரும் சஞ்சரிக்கும் நேரம் இருள்…! அடர்த்தியான இருள். ஊர் துஞ்சும் வேளையிலும் கூடக் கண்ணிமைக்காத இரவு சஞ்சாரிகள் இவர்கள். சங்கப் பாடல் ஒன்றில் ஊர்க்காவலர்கள் உறங்கிய பின்னும் நான் உறங்காது தனித்திருக்கிறேனே என்று புலம்புகிறாள் காதல் வயப்பட்ட தலைவி ஒருத்தி.

காதலுக்கு மட்டுமன்றிக் களவுக்கும், காவலுக்கும் கூடப் பின்னணித் திரையாகும் இருளை…

‘’’’இருளுக்குள் மூழ்கிக் கிடக்கும் நகரம், கண்ணாடிப் பேழைக்குள்ளிருக்கும் காட்சிப் பொருளைப் போன்றது. இரவில்தான் நகரம் வடிவம் கொள்கிறது. கரும் பளிங்குச் சிலையென அது மிதந்து கொண்டிருக்கிறது..’’

என நேர்த்தியான புனைவுத் திறத்தோடு காட்சிப்படுத்தும் நாவல், இருள் கப்பிய அடர் மூலைகளுக்குள்ளே காவலர்கள் ஊர்ந்து செல்லும் நுட்பத்தை இவ்வாறு விவரிக்கிறது.

‘’பகல் மட்டும்தான் இருளற்ற இடம்; ஆனால் இருள் ஒளியற்ற இடம் அல்ல. இந்த சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டவர்கள், பின்னப்பட்ட வலையில் வந்தமரும் அதிர்வை உடனடியாக உள் வாங்கும் சிலந்தியைப் போலப் பிரிக்கப்பட்ட காவல் தெருக்களின் சலனத்தைத் தன் நரம்புகளோடு பிணைத்துக் கொண்டு கண்டறிகிறார்கள்’’

களவுக் கம்புக்கு ‘மொண்டிக் கம்பு’ என்ற பெயர் வந்த காரணத்தையும் சுவாரசியமாக விவரித்துக் கொண்டு போகிறது நாவல். ஒரு வீட்டில்களவுக்காகப்போன மொண்டி என்னும் தாதனூர்க் கள்வன்,கன்னம் போட்டுத் தலையை உள்ளே நுழைக்கும்போது உள்ளே இருந்தவர்கள் அவன் தலையை வெட்டி விடுகிறார்கள். அவன் தலை கிடைத்தால் எந்த ஊர்க்காரன் என்பது தெரிந்து விடும் என்பதற்காகக் கூட வந்த மற்ற திருடர்கள்,கிராமத்தாருக்குத் தெரியாமல் உடைகல்லைப் போட்டு அவனது தலையை உருத் தெரியாமல் சிதைத்துவிட்டு அவனது உடலோடு பனைமரத் தலையைச் சேர்த்து வைத்துப் புதைத்து விடுகிறார்கள். அன்றிலிருந்து கன்னம் வைத்தவுடன், உடனடியாக உள்ளே நுழைந்து விடாமல், ஒரு கம்பில் துணியையோ சாக்கையோ தலைப்பாகை போலச் சுற்றி ஓட்டையின் உள்ளே விட்டுவிட்டு அதற்கு ஒன்றும் ஆகவில்லை என்றால்தான் திருடுவதற்காக ஆட்கள் உள்ளே போவது என்னும் வழக்கம் ஏற்படுகிறது. அந்தக் கம்புக்கும் ’மொண்டிக்’ கம்பு என்ற பெயரே நிலைத்து விடுகிறது. மேலும் முதன்முதலாகக் கன்னமிடச் செல்பவன்,மொண்டிக்குக் காணிக்கை செலுத்தவேண்டும் என்ற வழக்கமும் அப்போது தொடங்கி உருவாகிறது. மொண்டியின் உருவகமாகப் பனைமரத்தை வழிபாடு செய்யும் அவனது உடன்பங்காளிகள் ‘பனைமரத்தான் வகையறா’ ஆகிறார்கள்.

’’கதை மண்ணிலிருந்து துவங்குகிறது;மண்ணைப் பற்றியே பேசுகிறது;இந்த மண்ணின் தலை விளைச்சல் கதைதான்;மண்ணும் கதையும் பிரிக்க முடியாத உருவாகக் கொண்ட கருவில் பிறந்தவர்கள்தான் தாதனூர்க்காரர்கள்’’ என்று நாவலில் அந்த இனத்தவர் பற்றி விவரிக்கும் வெங்கடேசன், ‘’பாட்டிதான் கதைகளின் ஊற்றுக் கண்ணைத் திறந்து விட்டவள்;அவை வெறும் கதைகள் அல்ல;கதையும் வரலாறும் பிரியா முது மொழியில் சொல்லப்பட்டவை;அம் மொழியில் முளைத்து என் போக்கில் வளர முயன்ற ஆசைதான் இது’’ என்று ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்.

கதை..கதைக்குள் கதை…அதற்குள் கிளை பிரியும் இன்னுமொரு கதை எனக் கிட்டத்தட்ட அறுநூற்றுக்கும் மேற்பட்ட குறுங்கதைகளை.., நாட்டார் வழக்கில் உலவும் வாய்மொழிக் கதைகளைக் கதை ஓட்டத்தோடு இயைந்தபடி நாவலில் படர விட்டிருக்கிறார் நாவலாசிரியர். இந்தக் கதைகள் சிலவற்றின் அடிப்படையிலேயே இயக்குநர் வசந்த பாலனின் ‘அரவான்’ திரைப்படமும் உருவாகி வருகிறதென்பதைப் பலரும் அறிந்திருக்கக் கூடும்.

’‘கதை அறுந்துபோனால் ஊர் அறுந்துபோகும். ஊரும் கதையும் வேறல்ல, கதையும் உயிரும் வேறல்ல’’என்று நாவல் சொல்வது போல இவ்வாறான நாட்டார் கதைகளைத் தொகுத்து ஆவணப்படுத்தும் அரியதொரு கருவூலமாகவும் இந்நாவல் உருப்பெற்றிருக்கிறது.


***

'காவல் கோட்டம்’நாவலின் முக்கியமானதொரு சிறப்பு,இனவரைவியல்(குறிப்பிட்ட இனக்குழுக்கள் சார்ந்த செய்திகள்) சார்ந்த படைப்பாக்கங்களில் அது குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருக்கிறது என்பதே.

''கொல்லவாருகள், பிரமலைக் கள்ளர்கள் என்ற இரண்டு இனக்குழுக்களைப் பற்றி இந்த நாவல்ல பேசியிருக்கேன்''என்று ஒரு பேட்டியில் நாவலாசிரியர் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த இரு இனக் குழுக்களின் வாழ்க்கை முறை,சடங்கு சம்பிரதாயங்கள்,பழக்க வழக்கங்கள்,உட்சாதிப் பிரிவுகள்,வழிபாட்டு முறைகள் என அனைத்தையும் கதைப் போக்கிலிருந்து மிகுதியும் தடம் பிறழ்ந்து செல்லாத சுவாரசியத்தோடு தொகுத்துத் தரும் சுவையான ஆவணத் தொகுப்பாக இந்நாவல் அமைந்திருக்கிறது.

நாவலின் தொடக்கமே விறுவிறுப்பான மாபெரும் திரைப்படம் ஒன்றின் தொடக்கக் காட்சி போலப் பரபரப்புடனும் பிரம்மாண்டத்துடனும் காட்சிப்படுத்தப்படுகிறது. மதுரையைத் தாக்க வரும் நாயக்கர் படைகளின் உட் சாதியமைப்புக்கள் நாவலில் இவ்வாறு விரிகின்றன.

“கிழக்கே வைகையின் தென்புறமெங்கும் தோப்புக்குள் கொல்லவார்களின் பெரும்படை காத்திருந்தது.அவர்கள் வழக்கப்படி குறுங்குலப் பிரிவுகளின் கீழ் தனித் தனியே அணி அமைத்திருந்தனர்.தொண்ணூற்றாறில் நாற்பத்திரண்டு குறுங்குலங்கள் இங்கே வந்திருந்தன.வைகைக்கரையில் ஆரம்பித்து புல்லாவுலவாரு, பந்துமுலுவாரு என்று அடுக்கடுக்காய் நீண்டு தென்கோடியில் சூர்ணவாரு வகையறக்களோடு அணிகள் நிறைவுற்றன..''

ஒரு குழுவுக்குள் இத்தனை குறுங்குழுக்களா எனவியக்க வைக்கும் இச் செய்திகள்,ஒவ்வொரு குறுங்குழுவின் தனிச் சிறப்பு அவையவை கையாளும் ஆயுதம்/போர்த்தந்திரம்பற்றிய தகவல்கள் ஆகிய அனைத்தும் நாவலாசிரியரின் கடும் உழைப்பினால் மட்டுமே திரட்டப்பட்டிருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்க வழியில்லை.இவற்றை வெறும் தகவல்கள் என்ற நிலையில் கொள்ளாமல் இதுவரை வரலாற்றில் சொல்லப்படாத தகவல்களாகவும் நிரப்பப்பட்ட இடைவெளிகளாகவுமே பார்க்கவேண்டும் எனக்கூறும்ஜெயமோகன்,''வெறும் வரைபடமாக இருந்த வரலாற்றில் இந்தத்தகவல்களைப் பெய்து அதை வாழ்க்கையாக ஆக்கியிருக்கிறார்.''என்று தன் பதிவில் குறிப்பிடுகிறார்.

கள்ளர் சாதியைப் பற்றிய நுணுக்கமான பல செய்திகளும் நாவலில் விரிவாக இடம் பெற்றிருக்கின்றன. கள்ளர் சமூகஅமைப்பு, குடும்ப உறவுகள்,வழிபாடு,கவரடைப்பு(சுன்னத்துசெய்வதுபோன்றது),காது வளர்த்தல் என்று பல விரிவான குறிப்புக்கள் நாவலில் பொதிந்து கிடக்கின்றன..

நீளமாகக் காது வளர்த்து அதில் தண்டட்டி எனப்படும் காதணிகளை அணிந்திருக்கும் பெண்களைத் தென்னாட்டுக் கிராமங்களில் இன்றும் கூட மிகச் சாதாரணமாகப் பார்க்க முடியும்.ஆனால்,அந்தக் காது வளர்ப்புக்குப் பின்னாலிருக்கும் கலாச்சாரப் பின்னணியை...குறவனைப் பிடித்து வந்து காது குத்திக் கொள்வதிலுள்ள சிரமங்களை ஒரு அத்தியாயம் முழுக்க விவரித்துக் கொண்டு செல்கிறது நாவல்.

‘’பெண்ணுக்கு அழகு காது;பொடனி வரை காது வளர்த்து தண்டட்டியைக் காற்றில் நீந்தவிட்டு நடக்கும் அழகிகள்தான் கள்ள நாட்டைக் கட்டி ஆள்கின்றனர்.வளர்ந்த காதுகளின் வகை வைக்க முடியாத அழகை மெச்சி பாடி வைத்துள்ள பாட்டு ஊருக்கு ஊர் அம்பாரமாகக் குவிந்து கிடக்கிறது.தொங்கும் காதின்பெருந்துவாரம் என்பது...கன்னவாசல் என இருக்கிறது.அடைபடாத கன்ன வாசல் கொண்டு காற்றை அளைந்தபடி அவள் வாழ்வெல்லாம் அலைந்து திரிகிறாள்’’என்று வருணிக்கும் நாவல் இந்த வழக்கம் சார்ந்த அந்த இனப் பெண்களின் உளவியலையும் கூடவே முன் வைக்கிறது.

கள்ளர் இனப் பெண் எப்படிப்பட்ட ஏச்சையும் பேச்சையும் தாங்கிக் கொண்டு எதிரடி தரக் கூடியவள்;ஆனால் அவளாலும் கூடத் தாங்க முடியாத அவலம் காதறுந்து போகும் நிலை.’போடி காதறுந்த மூளி’என்பதே அவளை உக்கிப் போகவைக்கும் சொல்.’’அறுந்த காதோடு அலையும் அவலம் எவளுக்கும் வரக் கூடாது என்று ஒவ்வொருத்தியும் நினைப்பாள்.ஒருபோதும் ஒட்ட வைக்க முடியாத காதோடு இருப்பவளின் மனதில் ஏற்படும் ஊனம் மரணம் வரை சரி செய்ய முடியாது’’என்று அந்த மனநிலையை விவரிக்கிறார் வெங்கடேசன்.

காது வளர்த்துக் கொள்ளும் சம்பிரதாயம் ஒருபுறம் இருக்கக் காது வளர்க்க ஓட்டை போடும் குறவனைப் பற்றியும் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேல் படிப்படியாக அவன் செயல்பட்டுக் கொண்டே வரும் முறைபற்றியும் கூட அதே அத்தியாயம்,விவரங்களை அடுக்கிக் கொண்டு போகிறது.தாதனூரில் காது வளர்க்கும் குறவனே இல்லாமல்போக,எங்கிருந்தோ ஒருவன் தேடிப் பிடித்துக் கொண்டு வரப்படுகிறான்.இது வரை காது வளர்க்காத பெண்களுக்கெல்லாம் அவன் வரிசைக்கிரமப்படி காதுகுத்திப் படிப்படியாக ஓலை செருகி...துணி செருகி ஓட்டையைப் பெரிதாக்கிக் காது வளர்த்து விடுகிறான்.இவ்வாறு செய்யும் அவனே,பிறகு தாதனூருக்குள் ஒரு திருட்டையும் நிகழ்த்தி விட்டுப் போய்விடுகிறான்.‘காது குத்துதல்’என்பது திருட்டு என்ற பொருளில் வழங்கப்பட இது போன்ற செயல்களே காரணமாகியிருக்கலாம்.காது வளர்க்கும் சம்பிரதாயங்கள் போன்றவை அருகிப் போன இன்றையை சூழ்நிலையில் அது பற்றிய நுட்பங்களை அறிவதற்காக அத்தகைய குறவன் ஒருவனைத் தேடித் தான் பல நாட்கள் அலைந்து திரிய வேண்டியிருந்ததை தில்லி தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய பாராட்டு விழா ஏற்புரையிலும் குறிப்பிட்டார் திரு வெங்கடேசன். .

நாவலில் இடம்பெறும் இன்னொரு முக்கியமான விவரிப்பு தாது வருட பஞ்சம் பற்றியது.மழை பொய்த்து நீர்நிலைகள் வறண்டு போகப் பஞ்சமும் பட்டினியுமாய்ப் பரிதவிக்கும்கிராமமக்கள்,பஞ்சம் பிழைக்க கேரளத்துக்கும்,மலாயாவுக்கும் கொழும்புக்குமாக- ஊரைவிட்டுப் பெயர்ந்து செல்கிறார்கள். அவ்வாறு பெயர்ந்து செல்லும்போதே மரணமும் அவர்களை விடாது துரத்தியபடி இருக்க,அதன் கோரப்பிடிக்குப் பலர் இரையாகிப் போகிறார்கள்.'’தாயைப் புதைத்த மகனும் மகனைப் புதைத்த தந்தையும் எல்லோரையும் புதைத்த மருமகளும் நின்று வடிக்க சொட்டுக் கண்ணீரும் நேரமும் இன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தனர்…கலங்கிய குட்டையில் கிடந்த தண்ணீரைக் குடிக்கும்பொழுது மரணம் அவர்களைக் குடித்தது.பெரும் படையெடுப்பு போல அந்த இடப்பெயர்வு நடந்தது.’’என்று அந்தக் காட்சியை விவரிக்கிறது நாவல்.

மதுரை மாநகரின் முதன்மையான வரலாற்றுக்கு ஊடாக,எழுதப்படாத பல வரலாறுகளைச் சொல்லியபடி வரலாற்றின் இடைவெளிகளை நிரப்பிக் கொண்டுசெல்லும் இந்நாவல்,பத்தாண்டுக் காலம் நாவலாசிரியர் மேற்கொண்ட அயராத முயற்சியால், தமிழின் மிக முக்கியமான நாவலாகச் சிறப்பிடம் பெற்றிருக்கிறது.

வரலாறு,சமூகவியல்,இனவரைவியல்,நாட்டார் மரபுகள்,மிஷினரிகளின் ஆவணங்கள் எனப்பலவற்றினூடாகவும் பயணப்படும் இந்நாவல் ,தமிழ்ச்சமூகத்தால் வரவேற்கப்பட வேண்டிய ஒரு படைப்பு என்பதோடு,இப் படைப்பை முழுவதுமாக வாசிப்பதே இதன் பின்னணியிலுள்ள உழைப்புக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும்...