களவியல் காரிகை

ஆ. இரா. வேங்கடாசலபதி

இந்த ஆயிரம் பக்க நாவலைப் படித்து முடித்ததும் ஏற்படும் உணர்வு மலைப்பும் பிரமிப்பும்-மலைப்பூட்டுவது ஆசிரியருக்கு நோக்கமாக இல்லாத போதும். மலைப்பு நீங்காத நிலையிலேயே இம்மதிப்பீடு செய்யப்படுகிறது என்ற முன்னெச்சரிக்கையோடு தொடர்கிறேன்.

பி.கே. பாலகிருஷ்ணன் எழுதிய ‘நல்ல நாவலும் மகத்தான நாவலும்’ என்ற மலையாளக் கட்டுரையை- நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பில்- படித்தது நினைவுக்குவருகிறது. ‘காவல் கோட்டம்’ நல்ல நாவல் என்பதில் ஐயமில்லை. மகத்தான நாவலா என்பதை இனி பார்ப்போம்.

ஒருவகையில் ‘காவல் கோட்டம்’ உண்மையான வரலாற்று நாவல். வரலாற்றைப் போலவே நாவலிலும் காலம் என்ற கூற்றின் ஊடாட்டமே கட்டுக்கோப்பைத் தருகிறது. ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலில் மூன்றாண்டுகள் தொழிற்படுகின்றன என்றால் ‘காவல் கோட்டத்தில் அறு நூறாண்டுகள் தொழிற்படுகின்றன. சுந்தர ராமசாமி கையில் நுண்ணோக்காடி. சு. வெங்கடேசனிடம் தொலை நோக்காடி.

விரிவும் நுட்பமும்- ஆசிரியர் இடையிடையே குறுக்கிட்டுப் பேசாமல் இருந்திருந்தால் இன்னும் - ஆழமும் கூடியிருக்கும் நாவல் இது. பதிநான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக் காபூரின் மதுரைப் படையெடுப்பின்போது கொல்லப்படும் காவல்காரன் கருப்பணனின் மனைவி சடைச்சி தாதனூரில்- இது மதுரைக்கு மேற்கே சில கல் தொலைவில், சமண மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதாகக் குறிப்பு-தன் கால்வழியை நிறுவிக் கிளை பரப்பும் கள்ளரின் கதை இது. இதைத் தாதனூர் மான்மியம் என்றும் சொல்லலாம். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மதுரை நகரக் காவல் உரிமை பெற்று, வெள்ளையராட்சியிலும் அதனை நிலைநிறுத்திக்கொள்ள முயலும் தாதனூர்க் கள்ளர்கள், குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டு (பெருங்காம) நல்லூர் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்வதோடு நாவல் நிறைவு பெறுகிறது.

இந்த நாவலைப் பற்றிப் பேசும்போது விரிந்த கித்தானில் வரைந்த ஓவியம் என்ற உருவகம் பயன்படுத்தப்படுவதைக் கேட்டேன். சுவரோவியம் என்பதே அதைவிடப் பொருத்தமாகலாம். எங்கே தொடங்குவது, எதைப் பார்ப்பது, எந்த வரிசையில் பார்ப்பது என்று மலைக்கும்வகையில் சுவரெங்கும் கூரையெங்கும் பரந்திருக்கிறது இந்தச் சுவரோவியம்.

தெலுங்குச் சாதிகள் தமிழகத்தில் காலூன்றியது, பாளையப்பட்டுகள் உருவான கதை, யூனியன் ஜாக் கொடி கட்டிப் பறந்தது, வைகை அணைக் கட்டுத் திட்டத்தின் செயலாக்கம் எனப் பல்வேறு செய்திகள் கதைப் போக்கோடு இணைகோடுகளாக வரையப்பட்டுள்ளன.

வௌவால் வகைகள், கள்ளி வகைகள், வேட்டையின் நுட்பங்கள் எனப் பல்வேறு நுட்பங்கள் நாவலில் விரவியுள்ளன. போர், போர்முறைகள், கோட்டை அமைப்பு, கொத்தளம், வளரி, வல்லயம், அலங்கம் ... எனப் போர்ச் செய்திகள் மிகுந்த நம்பகத்தன்மையுடன் பதிவாகியுள்ளன. (ஆனால் தமிழகக் கோட்டைகளின் சிறப்புக் கூறான சரக்கூடு பற்றி எங்கும் குறிப்பில்லை!)

கள்ளர் சாதியைப் பற்றிய விரிவான இனவரைவியல் செய்திகள் இயல்பாகப் பதிவாகியுள்ளன. கள்ளர் சமூக அமைப்பு, குடும்ப உறவுகள், வகையறாக்களின் தோற்றம், சாமிகளின் பிறப்பு, வழிபாடு, கவரடைப்பு எனும் விருத்தசேதனம், காது வளர்த்தல் என - லூயி துமோந்தின் ஆய்வு நூலில் கூடக் காண முடியாத-செய்திகள் நாவலில் பொதிந்துள்ளன.

தாதனூரின் மாந்தர்கள் நிணமும் தசையுமாக நாவலில் உயிர் பெற்றுள்ளனர். இவ்வளவு உயிரோட்டமான கிழவிகளைத் தமிழ்ப் புனைவுலகு இதுவரை கண்டதில்லை.

நாவலில் விவரிக்கப்படும் களவுக் கலைநுட்பங்களைச் சொல்லி மாளாது. ‘காவல் கோட்டம்’ என்பதற்குப் பதிலாக இந்நாவலுக்குக் ‘களவியல் காரிகை’ என்றே பெயரிட்டிருக்கலாம்.

தமிழின் சொல் வளத்தையும் விரிவையும் காட்டக்கூடியதாக மொழி அமைந்துள்ளது. தமிழ் அகராதிகள் இன்னமும் எவ்வளவு குறைபாடுடையவை என்பதைக் ‘காவல் கோட்டம்’ உரக்கப் பறைசாற்றுகிறது.

கவரடைப்பு செய்தபின் சிறுவர்கள் கிணற்றுக்குள் குதிக்கிறார்கள். குருதி ‘மெல்லக் கசிந்து நீருக்குள் செம்மண் புழுப்போல ஊர்ந்து போனது...’ என்ற படிமம் ‘பொடி மணலில் சுருளும் கபம்’ என்பதைப் போல் மறக்க முடியாததாக மனத்தில் நிற்கிறது.

இருளைப் பற்றி- இருட்டைப் பற்றியல்ல - எவ்வளவு விரிவான வருணனைகள்! இருளில் இத்தனை நிறங்களா, அடர்த்திகளா, தன்மைகளா, நீர்மைகளா என வியக்கும்வண்ணம் நாவலெங்கும் பரந்து விரிகின்றது இருள். இருளுக்குள் துலங்குகிறது ‘காவல் கோட்டம்’.
‘காவல் கோட்டம்’ என்ற நல்ல நாவலை மகத்தான நாவல் என்று உடனே அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாத அளவுக்குச் சில தடைகள் இல்லாமலில்லை.
நீளம். ஆயிரம் பக்கம் என்பதனாலல்ல இந்தக் குறை. குறளுக்கு ஒரு சீர்கூட மிகை. கம்பராமாயணத்திற்குப் பல நூறு மிகைப் பாடல்களும் சாலும். கறாரான கத்தரிக்கோலால் ஓர் இருநூறு பக்கம் குறைவான ஆனால் செறிவான நாவலாகக் ‘காவல் கோட்டம்’ அமைந்திருக்க முடியும். சில இயல்களை அப்படியே நீக்கியுமிருக்கலாம்.

பல ஆண்டுகள் விரிவான படிப்பு, வரலாற்று ஆவணங்களிலும் நூல்களிலும் தோய்வு, நேரிடையான கள ஆய்விலும் வாழ்விலும் பெற்ற தரவுகள் எல்லாவற்றையும் - இனி தன்னிடம் வண்ணங்களே இல்லை எனும் அளவுக்கு - கொட்டித் தீர்த்திருக்கிறார் சு. வெங்கடேசன். இதன் விளைவாக நாவலை எங்கு முடிப்பது எனத் திண்டாடியிருப்பதும் தெரிகிறது. இதனால் தாதனூர் பற்றிய கதை (பெருங்காம) நல்லூரில் முடியும் பொருத்தமின்மை தலைதூக்குகிறது.

அபாரமான வருணனைகள் நிரம்பிய இந்த நாவலில் சில விவரிப்புகள் - முக்கியமாக வரலாற்றுப் பின்புலத்தைச் சுருக்கமாகத் தீட்டிக் காட்டும் இயல்களில்-மிகத் தட்டையாக அமைந்துள்ளன.

நாவலின் வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாத பலவீனமான தலைப்பு ‘காவல் கோட்டம்’.

ஒரு நல்ல பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பாராட்டுக்குரிய நாவலுக்கு இத்தனை ஒற்றுப் பிழைகளும், ஒருமை பன்மை மயக்கங்களும் ஏற்புடையனவல்ல. மேலும் நகைச்சுவை என்பது மிக அருகியே காணப்படும் ஒரு நாவலாகவும் ‘காவல் கோட்டம்’ அமைந்துவிட்டது.

இவை எல்லாவற்றுக்கும்கூட அமைதி கண்டுவிடலாம். இந்நூலின் அரசியல்தான் மிகவும் இடறுகின்றது. ‘காவல் கோட்டம்’ முன்வைக்கும் சாதிப் பெருமை கடுமையான விமரிசனத்திற்குரியது.

சட்டக் கல்லூரியின் துண்டறிக்கையில் டாக்டர் அம்பேத்கரின் பெயர் நீக்கப்படும் காலம் இது. இன்றளவும் மேலக் கள்ளர் நாட்டில் ‘மதுரை வீரன்’ திரையிடப்படுவதில்லையாம். போக்குவரத்து நிறுவனத்திற்கு வீரன் சுந்தரலிங்கம் பெயர் வைக்கப்போய் திருவள்ளுவர் முதல் அனைத்துப் பெரு மக்களின் பெயர்களும் இல்லாமல் போயின.

‘காவல் கோட்டம்’ களவின் நியாயங்களை மட்டும் முன்வைக்கவில்லை. அதனை மகத்துவப்படுத்துகிறது, காவியப்படுத்துகிறது.

‘எல்லாச் சொத்தும் களவே’ என்றார் சோசலிச முன்னோடி புரூதோன். ‘சொத்துரிமைக்கு எதிரான மிகப் பெரிய குற்றம் சொத்தில்லாமல் இருப்பதுதான்’ என்றார் பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்றாசிரியர் இ. பி. தாம்சன். ஆனால் களவுக்குப் பின்பும் வர்க்கம் உண்டு. தாதனூர்க்காரர்களின் எல்லாக் களவுகளையும் காவியப்படுத்தியுள்ளார் சு.வெங்கடேசன். தாது வருஷப் பஞ்சத்தின்போது தானிய வண்டிகளைப் பசித்த ஏழை மக்கள் வழிமறிக்கிறார்கள். பதுக்கல் வியாபாரிகளின் சார்பாகத் தாதனூர் காவல்காரர்கள் வண்டிகளுக்குப் பாதுகாப்புத் தருகிறார்கள்.குடியானவன் உழைப்பில் உருவான ஏழு மாதப் பயிரை இரவோடிரவாகக் கதிர் கசக்குகிறார்கள். காவல் கூலி தண்டுவது போதாதென்று துப்புக்கூலியும் வாங்குகிறார்கள். ஆனால் நாவலாசிரியரின் சார்பு முழுவதும் உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கிறது. காவல்காரர்களின் அக்கிரமங்களைத் தாங்க முடியாமல் மூன்று மாவட்டங்களில் விவசாய வெகுமக்கள் ‘பண்டு’ திரட்டிக் கிளர்ந்தெழுகிறார்கள். இந்த முற்போக்கு நாவல் இவ்வெழுச்சியைக் கொச்சைப்படுத்துகிறது.

1899இல் நாடார் மக்களுக்கு எதிராக நடந்த சிவகாசிக் கொள்ளையில் மேலநாட்டுக் கள்ளர்கள் முக்கியப் பங்காற்றினர் என்பது வரலாறு. மதுரைக்கு வெளியே அமைந்த வண்டிப் பேட்டைக்குத் தாதனூர்க்காரர்கள் காவல் காத்ததைச் சொல்லும் ‘காவல் கோட்டம்’ சிவகாசிக் கொள்ளையைப் பற்றி மௌனம் சாதிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது.

தாதனூரின் ஒவ்வொரு நபரும், பெரியாம்பிளையும், கிழவிகளும்- புத்திக்கூர்மை குறைந்த மங்குணிவரை - தனித்த அடையாளங்களோடு விளங்கும் இந்த நாவலில் சேவைச் சாதிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் அடையாளமுள்ள மனிதர்களாக இல்லை - அதே வேளையில், வேல. ராமமூர்த்தியின் ‘கூட்டாஞ்சோறு’ நாவலில் உள்ளதுபோல் சுயமற்றவர்களாகவும் இல்லை என்பதைச் சொல்ல வேண்டும். பிறரின் வன்முறை கொடூரமாகச் சித்தரிக்கப்படும் இந்நாவலில், கள்ளரின் வன்முறை இயல்பானதாகவும் கொண்டாட்டத்திற்குரியதாகவும் காட்டப்படுகிறது.

இந்த நாவலும் இதன் ஆசிரியரும் இக்கேள்விகளை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்?

கான முயல் எய்துவதற்காக சு.வெங்கடேசன் அம்பேந்திச் செல்லவில்லை. ஆனால் அவர் கையில் வேலும் இல்லை. ஏனெனில் மகத்தான நாவல் என்ற யானையின் மத்தகத்தில் அது செருகியுள்ளது. யானை விழுமா விழாதா என்பது காலத்தின் கையில்

(நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

காலச்சுவடு, பிப்ரவரி 2009